Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
ஆண்டிபட்டியில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த அண்ணன், தம்பி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் ஒரே மாதிரியான வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்கின்றனர். இதனால் யாரை ஆதரிப்பது என்று வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டி பட்டி, கடமலை மயிலை என ஊராட்சி ஒன்றியங்களும், கூடலூர் நகராட்சி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சிகளும் உள்ளன. இத்தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 என்று ஆக மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்கள் இங்கு உள்ளனர்.
வைகை உயர்தொழில்நுட்ப பூங்கா திட்டம், வருசநாடு-விருதுநகரை இணைக்கும் புதிய சாலை திட்டம், திப்பரவு அணை திட்டம், மூலவைகை ஆற்றில் குறுக்கே அணை, ஆண்டிபட்டி ஒன்றிய கண்மாய்களுக்கு குழாய் மூலம் நீர் நிரப்புதல் ஆகிய திட்டங்கள் பல ஆண்டு கோரிக்கைகளாக உள்ளன.
இந்த முறை அமமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் கோவில்பட்டியில் போட்டியிடுவதால் விஐபி அந்தஸ்தை இத்தொகுதி இழந்தது. தற்போது இத்தொகுதியில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிடுகின்றனர். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். எந்த தொகுதியிலும் இப்படி ஒரு போட்டி இல்லாததால் மீண்டும் இத்தொகுதி தனித்துவம் பெற்றுள்ளது.
மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் முதலில் பிரச்சாரங்கள் தொடங்கப் பட்டது இங்குதான். திமுக வேட்பாளர் மகாராஜன் ஏற்கனவே கரோனா நலத்திட்ட உதவி மூலம் கிராம மக்களை சந்தித்து வந்தார். அதிமுக வேட்பாளர் லோகிராஜன் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் என்பதால் வளர்ச்சித் திட்டங்களுக்காக தொகுதி மக்களின் தொடர்பிலேயே இருந்தார்.
வேட்புமனுதாக்கல் செய்ததும் இருவரும் கிராமப் பிரச்சாரங்களில் மும்முரமாகினர். ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் அவர்கள் அந்தந்த பகுதிகளின் தேவையை ஏற்கனவே அறிந்திருப்பதால் அதுகுறித்த வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
உதாரணமாக ஆண்டிபட்டி ஒன்றியங் களுக்குச் செல்லும் போது முல்லைப் பெரியாறில் இருந்து குழாய் மூலம் கண்மாய்களுக்கு நீர் கொண்டுவரப்படும் என்று இருவருமே தெரிவிக்கின்றனர். அதேபோல் நெசவாளர் பிரச்னை, மூலவைகையில் தடுப்பணை, புறவழிச்சாலை என்று வாக்குறுதிகள் வழங்கி வருகின்றனர்.
க.மயிலை மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியங்களுக்கு ரூ.162 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை சட்சபையில் வலியுறுத்தியதால் தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று திமுக வேட்பாளர் மகாராஜன் செல்லும் இடங்களில் எல்லாம் தெரிவித்து வருகிறார். அவரது தம்பியான அதிமுக வேட்பாளர் லோகிராஜனோ, எங்கள் ஆட்சியில்தான் இது செயல்படுத்தப்பட்டது, இதற்காக துணை முதல்வர் பெரும் முயற்சி எடுத்துள்ளளார் என்று கூறுகிறார்.
இப்படி செய்த திட்டங்களுக்கும், செய்ய உள்ள திட்டங்களுக்கான வாக்குறுதியும் ஒரே மாதிரியாகவே உள்ளன. இதனால் கிராம வாக்காளர்கள் குழப்பமடைகின்றனர்.
இருவரும் ஒரே பகுதியில் சந்தித்துக் கொள்ளாதவாறு பயண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் அந்தந்த கிளைக்கழக நிர்வாகிகள் இவர்கள் பேசிச் சென்ற விபரங்களையும், வாக்குறுதிகளையும் தங்கள் வேட்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். எனவே அதையே மற்ற வேட்பாளரும் கிராமங்களில் கூறி பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். கட்சிகள், கோட்பாடுகள், கொள்கைள், வேட்பாளர்கள் என்று அனைத்துமே எதிரெதிர் திசையில் இருந்தாலும் அவர்கள் சகோதரர்கள் என்ற பார்வையே பொதுவெளியில் இன்னமும் உள்ளது. இதனால் அவர்கள் சார்ந்த சமூகமும், பொதுமக்களும் இவர்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எளிதில் தீர்மானிக்க இயலாமல் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT