Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
மயிலாடும்பாறை போலீஸ், ராணுவப் பணிகளுக்கு உடல்திறனை மேம்படுத்துவதற்கான விளையாட்டுத் திடல் இல்லை. எனவே இளைஞர்கள் முள்மரங்களை அகற்றி மைதானம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடும்பாறை கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்யவும், விடுமுறை நாட்களில் விளையாடவும் இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. இக்கிராமத்தில் இருந்து பலரும் போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பணிகளில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் முறையாக பயிற்சி பெற வசதி இல்லை.
எனவே இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் மைதானம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து இக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் தாங்களே சுயமாக விளையாட்டுத்திடல்அமைக்க முன்வந்தனர். இதற்காக நேருஜிநகர் அருகே பயன்பாடின்றி இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்தனர். கருவேலமரங்களை அகற்றி தரைத்தளத்தை சமமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இளைஞர் ஸ்டீபன் கூறுகையில் மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பணி களுக்கு அதிக இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்ய விளையாட்டுத்திடல் இல்லை. மேலும் விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் விளையாடவும் இடமில்லாத தால் சிரமப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள இடமில்லாததால் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவே நாங்களே ஒன்றுகூடி புதிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT