Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

முதுகுளத்தூர் தொகுதியில் முந்தும் வேட்பாளர் யார்?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் முதுகுளத்தூரும் ஒன்று. பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்ஹா, பசும்பொன் தேவர் நினைவிடம், கமுதி கோட்டைமேட்டில் சேதுபதி மன்னர்கள் கோட்டையும், நல்ல தண்ணீர் தீவு, சாயல்குடியில் பனை வெல்லம் தயாரிப்பும் பிரசித்திபெற்றது.

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பேரூராட்சிகளும், முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும், கமுதி வட்டத்தில் ஒருபகுதியான முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ.கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக் கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந் தல், மாவிலங்கை, அரியமங் களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடி விலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலசுப்பிரமணியபுரம், பா.முத்து ராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம், கமுதி, தவசிக்குறிச்சி கிராமங்கள் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

1952 முதல் 2011 வரை 15 முறை நடந்த தேர்தல்களில் பார்வர்டு பிளாக் 2 முறை, சுதந்திரா கட்சி மற்றும் தமாகா தலா ஒருமுறை, சுயேச்சை 3 முறை, காங்கிரஸ் 4 முறை, திமுக 2 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் இந்தத் தொகுதி யில் வெற்றிபெற்றுள்ளனர். 2016 தேர் தலில் காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா பாண்டியன் வெற்றி பெற்றார்.

முதுகுளத்தூர் தொகுதி ஜாதி மோதல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. தொகுதி சீரமைப்பின்போது முதற்கட்டமாக முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டது. ஆனால், இப்பகுதி மக்கள் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட தொகுதியை நீக்கக்கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதனையடுத்து தேர்தல் ஆணையம் கடலாடி தொகுதியை நீக்கிவிட்டு, முதுகுளத்தூர் தொகுதியை அறிவித்தது.

தொகுதியில் முக்கியத்தொழில் விவசாயம். ஆனால் தொடர் வறட்சியால் 40 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ராமேசுவரம், ராமநாதபுரம், மதுரை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகளோ, சிறு தொழில்களோ இங்கு கிடையாது.

முதுகுளத்தூரில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. காவேரி குடிநீர் முதுகுளத்தூரின் சில தெருக்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. வெற்றிகரமான நரிப்பையூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டமும், அறிவிக்கப்பட்ட குதிரை மொழி குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தண்ணீர் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளன. முதுகுளத்தூர் நூலகத்துக்கு நிரந்தரக் கட்டிட வசதி செய்து தர வேண்டும், முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் கூடுதல் பாடப் பிரிவுகள் மற்றும் உயர் கல்வி பாடப்பிரிவுகள் கொண்டு வரவேண்டும்.

முதுகுளத்தூர் வழியாக புறவழிச்சாலை அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கீடு செய்திருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் அந்த நிதி வேறு பணிக்கு மாற்றி விடப்பட்டது. புறவழிச் சாலை ஊர் மக்களின் பிரதான கோரிக்கையாகும். சாயல்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேணடும். கடலாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி, கமுதி பேருந்து நிலையம் குறுகியதாக உள்ளதால் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அமைச்சர் கனவுடன் ராஜ கண்ணப்பன்

ஜெயலலிதாவின் (1991-1996) அமைச் சரவையில் பொதுப்பணி, நெடுஞ் சாலை, மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். 1996 தேர்தலில் திருப்பத்தூரில் திமுக வேட்பாளர் இராம.சிவராமனிடம் தோற்றார். தொடர்ந்து திமுக ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2000-ல் அதிமுகவை விட்டு விலகி, மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

2001 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்ட மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் இளையான்குடியில் போட்டியிட்டு தோற்றார். இதைத் தொடர்ந்து தனது கட்சியைக் கலைத்துவிட்டுத் திமுகவில் இணைந்த கண்ணப்பன் 2006 தேர்தலில் அதே இளையான்குடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போதைய சிவகங்கை மாவட்டத் திமுக செயலாளருர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எதிர்பாராத விதமாக மீண்டும் அதிமுகவில் இணைந்த ராஜகண்ணப்பனை 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கண்ணப்பனை 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் அப்போதைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் அதிமுக ஆளும்கட்சியாக வந்தாலும் கண் ணப்பனால் கரையேற முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ராஜ கண்ணப்பனுக்கான முக்கியத்துவம் குறைந்தது.தொடர்ந்து கடந்த 2020 பிப்ரவரியில் மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்டக் கூட்டம் கூட்டி ஸ்டாலின் தலைமையில் தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

தற்போது முதுகுளத்தூரில் திமுக வேட்பாளராக களம் காணும் ராஜ கண்ணப்பன் தேர்தலில் பெற்றால் மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அதிமுக

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா பாண்டியனிடம் தோல்வியை தழுவிய அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி மீண்டும் முதுகுளத்தூரில் போட்டியிடுவதற்கு ஏதுவாக கரோனா காலத்தில் தொகுதியின் பல பகுதிகளில் நிவாரண பணிகளை செய்து வந்தார். எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும் கூட, ஐந்து ஆண்டுகளில் முதுகுளத்தூர் தொகுதி பிரச்சனைகள் குறித்து ஆளுங்கட்சி மகளிரணி மாநில நிர்வாகி என்ற அடிப்படையில் உரிய அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று தனது தகுதியை உயர்த்தி வந்ததால் மீணடும் முதுகுளத்தூரில் போட்டியிட அவருக்கு அதிமுவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் கீர்த்திகாவுக்கு அவரது கணவரும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுகச் செயலாளருமான முனியசாமி பக்கபலமாக இருக்கிறார். அவர் முதுகுளத்தூரில் அதிமுக வெற்றி பெற தீவிரமாகப் பணியாற்றியும் வருகிறார்.

ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவுக்குச் சென்ற முன்னாள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன் தற்போது அமமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முருகனின் ஆதரவாளர்களும், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வாக்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை சரிவடையச் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியில் ரா.ரஹ்மத் நிசா என்பவரும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக நவபன்னீர் செல்வமும் போட்டியிடுகின்றனர். மேலும் இந்தத் தேர்தலில் போட்டியிட 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வாக்காளர்கள் விவரம்

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 8912 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 536 பேரும், பெண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 367 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 9 பேரும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x