Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

திமுகவிடம் இருந்து திருப்பத்தூர் தொகுதியைக் கைப்பற்ற போராடும் அதிமுக

மருது அழகுராஜ்

திருப்பத்தூர்

பாரி ஆண்ட பறம்புமலை, செட்டிநாடு மனம் வீசும் கானாடுகாத்தான், பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி, குன்றக்குடி கோயில்கள் அடங்கிய தொகுதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி.

இத்தொகுதியில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் ஆகிய 5 பேரூராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளும், கல்லல், சாக்கோட்டை ஒன்றியத்தில் பகுதியளவு ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்குலத்தோர், யாதவர், வல்லம்பர், முத்தரையர் உள்ளிட்டோர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.

மொத்த வாக்காளர்கள் 2,90,647 பேர் உள்ளனர். இதில் 1,42,327 ஆண்கள், 1,48,308 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இத்தொகுதியில் நடந்த 14 தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுயேச்சை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இத்தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வென்று எம்எல்ஏவாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளார். அவர் 2006-2011 வரை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

அவர் மீது திருப்பத்தூர் நகரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை மீண்டும் திறக்காதது, நலிவடைந்து வரும் கயிறு தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்காதது, திருப்பத்தூர் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பல ஆண்டுகளாக தொடர் வறட்சியால் இளைஞர்கள் பலர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காதது போன்ற குறைபாடுகள் உள்ளன.

ஆனால் தான் அமைச்சராக இருந்தபோது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் திருப்பத்தூர் பகுதியை இணைத்தது, திருப்பத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல சிதிலமடைந்த கோயில்களை புனரமைத்தது, மக்கள் தெரிவித்த அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்தது போன்றவற்றை தனது சாதனைகளாகக் கூறி வருகிறார்.

மேலும் 2 முறை எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால், எனது கோரிக்கைகளை அதிமுக அரசு கேட்கவில்லை என்றும் கூறுகிறார்.

வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் சவால்கள்

மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு புதிய ரயில் தடம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பத்தூரில் முடங்கிக் கிடக்கும் சுத்திகரிப்பு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெற்குப்பை பேரூராட்சியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திரப் பதிவுக்காக புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னமராவதிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து நெற்குப்பையில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். பிரான்மலை உச்சியில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத் தலம் உள்ளது. இதனால் மலைக்கு அடிவாரத்தில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றுவர ரோப் கார் அமைத்து தர வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் சிங்கம்புணரிக்குக் கொண்டு வர வேண்டும்.

அதேபோல, கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் அரசே தொழிலகத்தை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பன அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

இத்தொகுதியில் திமுக சார்பில் மூன்று முறை வெற்றி பெற்ற கே.ஆர்.பெரியகருப்பனே மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோட்டைகுமார், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி அமலன் சபரிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கூட்டணிக் கட்சிகளின் பலம் சாதகமாக இருந்தாலும், தொடர்ந்து மூன்று முறை வென்றும் திருப்பத்தூரில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்காதது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தராதது போன்றவை திமுக வேட்பாளருக்கு பாதகமாக உள்ளன.

அதேபோல் திமுக வேட்பாளர் தொடர்ந்து வெற்றி பெற்றும் தொகுதியில் சொல்லும்படியான திட்டங்களை செய்யாமல் இருந்தாலும் இத்தொகுதியில் கூட்டணிக்கட்சிகளின் பலம் பெரிய அளவில் இல்லாததால் கட்சி செல்வாக்கை மட்டும் நம்பி நிற்பது, ஆளும்கட்சி மீதான அதிருப்தி போன்றவை அதிமுக வேட்பாளருக்கு பாதகமாக உள்ளது.

இதுதவிர பெரிய கட்சிகளின் கூட்டணி பலமின்றி போட்டியிடுவதால் அமமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு பாதகமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x