Published : 20 Mar 2021 08:16 PM
Last Updated : 20 Mar 2021 08:16 PM
மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
பிரதமரே அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று ஆளுமட்சியினரை நோக்கி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு, ஆளும் அதிமுக கூட்டணியினர் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தும் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு வாங்கித் தர முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இப்படியாக, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த தேர்தலில் 8 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திமுக கூட்டணியில், அக்கட்சி மட்டும் மதுரை கிழக்கு மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த முறை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை வெற்றியை தக்கவைக்க, அந்தக் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஆனால், இந்தமுறை கடந்த முறையைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற திமுக தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. அதற்காக, ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுற்றுப்பயணத்தை வடிவமைத்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் இரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஸ்டாலின், இன்று மூன்றாவது முறையாக மதுரைக்கு வந்து பிரச்சாரம் செய்து சென்றுள்ளார்.
அவர், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், ‘‘நாடு முழுவதும் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நிதி ஒதுக்குமாம், ஆனால், மதுரைக்கு மட்டும் ஜப்பான் நாட்டிடம் நிதி கேட்குமா. மதுரை என்ன, ஜப்பானில் இருக்கிறதா, இந்தியாவில் இருக்கிறதா?, ’’ என்று காரசாரமாக கேள்விகேட்டு அதிமுக, பாஜக கட்சிகளை திணறடித்தார்.
இதையே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமானப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் வீடுகள் தோறும் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
அதற்கு அதிமுகவும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் கரோனாவால்தான் நிதி வருவதற்கு தாமதமானதாகவும், இதைக்கூட புரிந்து கொள்ளாமல் தேர்தல் அரசியலுக்காக பேசக்கூடாது, என்று விளக்கம் சொல்வதாகவும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT