Published : 20 Mar 2021 05:56 PM
Last Updated : 20 Mar 2021 05:56 PM

தூத்துக்குடியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடம்பூர் ராஜூ, டிடிவி தினகரன், கீதா ஜீவன் உட்பட 137 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

தூத்துக்குடி/கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் 34 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் இன்று நடந்தது.

அப்போது பிரதானக் கட்சிகளான திமுக வேட்பாளர் கீதாஜீவன், த.மா.கா. கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தேமுதிக வேட்பாளர் சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சுந்தர் உள்ளிட்ட 26 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அறிவித்தார். 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 32 பேர், 37 தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது.

இதில், 18 சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது களத்தில் திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளர் வடமலைப்பாண்டியன் உள்ளிட்ட 19 பேர் உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 31 பேர் 33 தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரீகா தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், சுயேச்சை போட்டியிட 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக வேட்பாளர் சண்முகநாதன், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட 38 பேர் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. இதில், 15 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் உள்ளிட்ட 29 பேர் களத்தில் உள்ளனர்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட மொத்தம் 23 பேர் 26 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிம் தலைமையில் நடந்தது. இதில், சுயேச்சையாக போட்டியிட மனு செய்த 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், அதிமுக வேட்பாளர் சின்னப்பன், அமமுக வேட்பாளர் சீனிச்செல்வி உள்ளிட்ட 16 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஓட்டப்பிடாரத்தில் 26 பேர் 30 வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகம் தலைமையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், திமுக வேட்பாளர் சண்முகையா, அதிமுக வேட்பாளர் மோகன், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி உள்ளிட்ட 18 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

போராட்டம்:

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்புலட்சுமி, மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், மாற்று வேட்பாளர் வைகுண்டமாரி ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுப்புலட்சுமி உள்ளிட்டோரிடம் தேர்தல் ஆணைய விதிகளை அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x