Published : 20 Mar 2021 04:13 PM
Last Updated : 20 Mar 2021 04:13 PM
புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து, சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கள ஒருங்கிணைப்பாளர் ஜான் விக்டர் சேவியர் இன்று (மார்ச் 20) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (மாஹே, ஏனாம் தவிர்த்து) உள்ள 28 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் வீதம் மொத்தம் 2,800 பேரிடம் பல்வேறு வகைகளில் கேள்விகளை முன்வைத்து கருத்துகள் கேட்கப்பட்டன.
கடந்த 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்தக் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 52 சதவீத ஆண்களும், 48 சதவீதப் பெண்களும் பங்கேற்றனர். அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 49 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 34 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க இருக்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கவில்லை.
மேலும், நீங்கள் விரும்பும் தலைவர் யார் என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் நமச்சிவாயத்துக்கும், 31 சதவீதம் பேர் ரங்கசாமிக்கும், 11.9 சதவீதம் பேர் நாராயணசாமிக்கும், பிற தலைவர்களுக்கு 10 சதவீதத்தினரும், யாரும் இல்லை என 7 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்".
இவ்வாறு ஜான் விக்டர் சேவியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT