Published : 20 Mar 2021 02:43 PM
Last Updated : 20 Mar 2021 02:43 PM

துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்தி வைப்பு

சென்னை

பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவை நிறுத்தி வைத்து, பின் ஏற்கப்பட்ட நிலையில் துறைமுகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஆட்சேபம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவும், துறைமுகத்தில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் வினோஜ்.பி.செல்வமும் போட்டியிடுகின்றனர்.

பாஜக தமிழகத்தில் போட்டியிட வசதியாக தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தொகுதிகளைத் தேர்வு செய்து அதற்குப் பொறுப்பாளர்களும் பல மாதங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டு அத்தொகுதியில் வேலை செய்ய அனுப்பப்பட்டனர். அவ்வாறு குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதியும், வினோஜ் பி.செல்வத்திற்கு துறைமுகம் தொகுதியும், கு.க.செல்வத்திற்கு ஆயிரம் விளக்கு தொகுதியும் உள்ளிட்ட பலருக்கும் தொகுதிகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.

ஆனால், சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் ஆயிரம் விளக்கில் குஷ்பு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. வினோஜ்.பி.செல்வத்திற்கு அவர் பொறுப்பாளராக இருந்த துறைமுகம் தொகுதியே ஒதுக்கப்பட்டது.

துறைமுகம் தொகுதி திமுக கோட்டையாகும். இங்கு சேகர்பாபு தொடர்ச்சியாக வென்று வருகிறார். இங்கு போட்டியிடும் வினோஜ்.பி.செல்வம் கடந்த 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரைக் குறிப்பிடாமல் மாற்றுப்பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதை இன்று பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபித்ததை அடுத்து வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வினோஜ் செல்வம் தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் அளித்த பேட்டியில், ''வேட்புமனுவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள பெயர் சம்பந்தமான ஆவணம் உள்ளது. சமர்ப்பிக்க உள்ளோம். நாளை காலையில் சமர்ப்பிப்போம், வேட்பு மனு ஏற்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

திமுக தரப்பு வழக்கறிஞர் பிரசன்னா அளித்த பேட்டியில், “பாஜக வேட்பாளரின் வேட்பு மனு காலை 11 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதே பெயரில் வேறொரு சுயேச்சை வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ததால் பிரச்சினை. அதனால் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய நாளை காலை 11 மணி வரை அவகாசம் அளித்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x