Published : 26 Nov 2015 04:06 PM
Last Updated : 26 Nov 2015 04:06 PM
புகார் அளித்த பெண் நினைத்தாலும், பாலியல் வழக்கை திரும்பப் பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் அங்குள்ள கல்லூரியில் 2009-2012-ம் ஆண்டுகளில் பயின்றபோது, அவருடன் பயின்ற மாணவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். இந்த விஷயம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்தது.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். முதலில் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த மாணவர், பின்னர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அப்பெண் தனது காதலர் மீது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டதாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண் மற்றொரு இளைஞரை மணக்க முடிவு செய்துள்ளார்.
இதனால் தனது பழைய காதலர் மீது அளித்த புகாரை திரும்பப் பெறுவதாகவும், அந்தப் புகார் மீதான நடவடிக்கையை கைவிடுமாறும் கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் 16.10.2015-ம் தேதி மனு அளித்தார்.
அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவில் மனுதாரர் திரும்பப் பெறுவதாகக் கூறப்படும் வழக்கு பெண்ணுக்கு எதிரான குற்றம் தொடர்புடையதாக இருப்பதால், மனுதாரரின் கூற்றை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பல்வேறு வழக்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் பலாத்கார செயல்கள் இருட்டில் பெண்களின் மதிப்பை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.
மேலும் பெண்களின் புனித உடலுக்கு எதிரான குற்றம் மற்றும் சமூகத்தின் ஆன்மாவுக்கு எதிரான குற்றம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவம், சமுதாயத்துக்கு எதிரான குற்றமாக இருப்பதால், அதில் தொடர்புடைய நபர் இதுபோல் வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா? அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமல் மனுதாரருக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுதாரருக்கு நிவாரணம் அளிக்க முடியாது.
எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT