Published : 20 Mar 2021 10:41 AM
Last Updated : 20 Mar 2021 10:41 AM

தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டத்தையாவது எதிர்க்கும் துணிவு இருந்ததா?- முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை

தமிழ்நாட்டை இப்போது 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். இது வெற்றிநடை அல்ல, வெற்று நடைபோடும் தமிழகம். எங்களை கேள்விக்கேட்கும் முதல்வர் பழனிசாமி மத்திய அரசைக் கேள்விக்கேட்டு எந்த திட்டத்தையாவது தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளாரா? தமிழகத்துக்கு எதிரான எந்த திட்டத்தையாவது எதிர்த்துள்ளீர்களா? என ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர் மாநகரில் பொதுமக்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் வருகிறது என்பதால் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக, 40,000 கோடி ரூபாய் வரை விதிகளைத் தளர்த்தி டெண்டர் விட்டு கடைசி நேரத்தில் காரியம் எதுவும் ஆகாத கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்தப் பணியும் முடியவில்லை.

இப்போது ஆளுங்கட்சி சார்பில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வராக இருக்கும் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த போது மத்திய அரசின் மூலமாக என்ன திட்டங்களைக் கொண்டு வந்தது என்று ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்த போது மத்திய அரசைப் பயன்படுத்திச் செய்திருக்கும் திட்டங்களை - சாதனைகளை நான் இங்கு பட்டியல் போட்டால் நேரம் போதாது. இருந்தாலும் நான் தலைப்புச் செய்தியாகச் சிலவற்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசின் மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 72,000 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இந்தியர்களின் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தோம். 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டு திட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தோம். பல்லாயிரம் கோடியில் தமிழகம் முழுவதும் நான்கு வழிச் சாலைகளை உருவாக்கித் தந்தோம்,

இன்னும் ஏராளமாக இருக்கிறது. நான் கேட்கிறேன் எங்களை கேள்வி கேட்கிற முதல்வர் பழனிசாமி அவர்களே, நீங்கள் இப்போது 4 வருடங்களாக கூட்டணியிலிருந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த கூட்டணி சார்பாக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். என்ன திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?

மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தீர்கள். அதை அறிவித்தது 2014-ம் ஆண்டு. அதற்கு அடிக்கல் நாட்டியது 2019-ம் ஆண்டு. இப்போது 2021. ஒரு செங்கல் கூட இதுவரையில் வைக்கவில்லை. முதல்வர் பழனிசாமி அவர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.

11 மருத்துவக் கல்லூரிகளை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் ஒன்று கூட தொடங்கப்படவில்லை. நான் இப்போது சொல்கிறேன். அந்த பணிகள் முடிவதற்கு இன்னும் 3 வருடங்கள் ஆகும். அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் அவை செயல்படும் சூழ்நிலை உருவாகும் என்ற உறுதிமொழியை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கஜா புயல் - ஒக்கி புயல் இவ்வாறு பல பேரிடர்களை நாம் சந்தித்தோம். அப்போதெல்லாம் மத்திய அரசு தர வேண்டிய நிதியைத் தரும் வாய்ப்பை இங்கிருக்கும் மாநில அரசு உருவாக்கவில்லை.

அதை கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தெம்பில்லை. கையைக் கட்டிக் கொண்டு - வாயைப் பொத்திக்கொண்டு அடிமையாக நிற்கிறீர்கள். அதைக் கேட்டுப் பெறுவதற்கு உங்களுக்கு வக்கில்லை, வகையில்லை.

நீட் தேர்வு - நீங்கள் வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. நீட் தேர்வைத் தடுக்கின்ற முயற்சியில் ஈடுபட வக்கற்ற வகையற்ற பழனிசாமி அவர்களே, நீங்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்த அருகதையும் கிடையாது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா? சி.ஏ.ஏ.வுக்காக, நாம் ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தினோம். குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசினோம். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அதிமுகவின் எம்.பி ஒருவர் இருக்கிறார். அவர் அதை ஆதரித்தார். அவர்கள் அதை எதிர்த்து குரல் கொடுப்பார்களா?

ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஏதாவது போராட்டம் நடத்தினீர்களா? மத்திய அரசை பார்த்து கேள்வி கேட்டீர்களா? அந்த ஜி.எஸ்.டி. வரியால் என்னென்ன கொடுமைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இதே திருப்பூர் இறக்குமதி - ஏற்றுமதியை ஊக்குவிக்க திடமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த இந்த மாநில அரசுக்கு ஆற்றல் இருக்கிறதா?

அப்புறம் ஏன் முதல்வராக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்குத் திமுகவைப் பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x