Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

சூலத்துடன் வந்து வேட்புமனுத் தாக்கல்

கையில் கருங்காலி கோல், சூலம் சகிதமாக புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன். படம்: எம்.சாம்ராஜ்

கட்சி வேறுபாடு இல்லாமல் புதுச்சேரி அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். ஜோதிடர்களின் வாக்குப்படி பல நடைமுறைகளை நாள்தோறும் கடைபிடிப்பவர்கள். குறிப்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்திற்கு, வெளியே செல்லும் வழியின் வழியாகதான் (Exit) காரில் உள்ளே வருவார். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அப்பா பைத்தியசாமியை வழிபடுவதுடன் சகுனம், நல்ல நாள், நேரம் பார்த்துதான் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், சகுனம், ராசி, கோயிலில் வழிபட்டு தரப்படும் கயிறு கட்டிக்கொள்ளுதல் ஆகியவற்றில் அதீத நம்பிக்கையுடையவர்.

இதற்கு புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனும் விதிவிலக்கல்ல. நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த அவர், கையில் சிறிய அளவிலான கருங்காலி கோல், சிறிய சூலத்துடன் வந்தார். ‘அதிர்ஷ்டம்’ என அவர் நம்பும் கருங்காலி கோல் மற்றும் ஜீவ சமாதி ஒன்றில் பூஜை செய்து கொடுத்த சிறிய சூலம் அது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கருங்காலி தடியை கையில் வைத்திருந்தால் திருஷ்டி, சூனியம், தோஷங்கள் விலகுமாம். ஜீவ சமாதியில் வைத்து வழிபட்ட சூலம் அனைத்திலும் வெற்றியைத் தேடித் தருமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x