Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
கோயில்கள் பக்தர்களிடம் திருப்பி ஒப்படைப்பு, புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி ரத்து,பூரண மதுவிலக்கு உள்ளிட்ட அம்சங்கள் தமாகா தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமாகா தலைவர்ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
விவசாயப் பொருட்களின் பலன் இடைத்தரகர்களிடம் செல்லாமல் விவசாயிகளுக்கு சென்றடைய வழிவகை செய்யப்படும். கரும்பு, நெல் தவிரமாற்றுப்பயிர்கள் பயிரிட வலியுறுத்துவோம்.மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு புதியஅனுமதி வழங்குவதை நிறுத்தி, அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதுடன், திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம், சுகாதாரக்கல்வி பள்ளிகளிலேயே அமல்படுத்தப்படும்.
இதுதவிர மாவட்டந்தோறும் பெரியவிளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மாணவர்களுக்கு இருசக்கர, கார் ஓட்டுவதற்கு பயிற்சி தந்து பள்ளி, கல்லூரிகளிலேயே உரிமம் பெறும் முறை அமல்படுத்தப்படும். வீடுகளில் வேலைசெய்யும் பணிப் பெண்களுக்கு தனியாக வாரியம் அமைப்பதுடன், பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்படும். திருநங்கைகளுக்கு செவிலியர் பயிற்சி தந்து மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அளிப்போம்.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை பாதுகாக்க அவற்றை பக்தர்களிடமே ஒப்படைத்து நிர்வாகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கப்பற்படை, கடல்சார் வேலைவாய்ப்புகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தப்படும்.
நெசவாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சாயப்பட்டறை கழிவுநீர் நீண்ட குழாய்கள் மூலம் கடலில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற தமாகா தொடர்ந்து முயற்சிக்கும். கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்று தமிழகம் முதல் மாநிலமாக கொண்டுவரப்படும். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக மீண்டும் எதிர்க்கட்சியாக வருவதற்கே வாய்ப்புள்ளது. 3-வது அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’’ என்றார். நிகழ்ச்சி முடிந்தபின் பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ சுந்தர், வாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இன்று முதல் பிரச்சாரம்
தமாகா மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாசன் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல்4-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்பின் ஈரோடு, திருப்பூர் என தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக வாசன் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தமாகா சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT