Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றால் மகிழ்ச்சி: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் கருத்து

ஈரோடு

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பழனிசாமி ஏற்றால், மகிழ்ச்சியடையும் முதல் ஆளாக நான் இருப்பேன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்திற்கு, தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை. இதையடுத்து, அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தோப்பு வெங்கடாசலத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பிற்குப்பின்னர் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட காரணத்திற்காக என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டி யிட்டவர், தற்போது பெருந்துறை தொகுதி வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி யிட்ட அவர் மீது முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கட்சித்தலைமை பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரானது.

கடந்த 40 ஆண்டுகாலமாக மாணவ பருவத்தில் இருந்து அதிமுகவில் படிப்படியாக நான் உயர்ந்துள்ளேன். என்னை நீக்கியதற்காக முதல்வரையோ, துணைமுதல்வரையோ குறை சொல்ல மனமில்லை. அமைச் சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகிய இருவரும் முதல்வருக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் என்னை நீக்கியுள்ளனர். இந்த தேர்தலில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய முதல்வர், துணை முதல்வரின் அனுபவத்தோடு ஒப்பிடுகையில், நான் கடைக்கோடியில் உள்ள சாதாரண தொண்டன். தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். ஆனால், முதல்வராக பழனிசாமியை நான் ஏற்றுக் கொள்வேன். முதல்வராக பழனிசாமி பொறுப் பேற்றால், மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

பெருந்துறைத் தொகுதியில் ஜெயலலிதாவின் ஆசியோடு நான் வெற்றி பெறுவேன். பெருந்துறை நான்குவழிச்சாலை சந்திப்பில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும். கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை மூன்று மாத காலத்தில் செயல்படுத்துவேன். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என முதல்வரை வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x