Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 85% வழங்கப்படும்: காஞ்சிபுரம் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் வாக்குறுதி

காஞ்சிபுரம்

அமமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தில் அரசுப் பணிகளில் 85 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அமமுக வேட்பாளர் மனோகரன், உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோரை ஆதரித்து அமமுக பொதுச் செயலர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் போட்டி போட்டு ரூ.1000, ரூ.1500 தருவதாக அறிவித்துள்ளன. ஆனால், நாங்கள் அம்மா பொருளாதார திட்டத்தின் மூலம் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம். இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்குவோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மத வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்படும்.

தமிழக அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 85 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.

கலை அறிவியல் கல்லூரி

ரேஷன் பொருட்களை வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை எடுப்போம். பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க 5 பேர் கொண்ட குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

இந்த தேர்தலில் தீய சக்திகளும், துரோக சக்திகளும் முறியடிக்கப்பட்டு அம்மாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுக்கே குடவோலை முறையை அறிமுகப்படுத்திய ஊர் உத்திரமேரூர். உத்திரமேரூர் பகுதி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். உத்திரமேரூர் ஏரி நிரம்புவதற்காக செய்யாறு ஆற்று நீரைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். வாலாஜாபாத் பகுதியில் கலை அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளைச் சேர்ந்த அமமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x