Published : 02 Nov 2015 08:28 PM
Last Updated : 02 Nov 2015 08:28 PM
உடலுக்கு ஊட்டம் தரும் மாவு வகைகளை தயாரித்து விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார் தன்னம்பிக்கை பெண் சுசீலா. சிறுதானிய, பயறு வகை மாவுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.
தூத்துக்குடி கேடிசி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஆறுமுகக்கனி (எ) சுசீலா (50). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் மகளிர் குழுவில் இணைந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது, அவரது எண்ணத்தில் உதித்தது தான் மாவு தயாரித்து விற்கும் தொழில்.
துவண்டுவிடவில்லை
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மகளிர் வளாகத்தில் வாடகைக்கு கடை எடுத்து பூரணி என்ற பெயரில் ஊட்டச்சத்து மாவு வகைகளை தயாரித்து விற்கத் தொடங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் யாரும் அந்த மாவு வகைகளை வாங்க முன்வரவில்லை. மாதம் வெறும் ரூ.300-க்கே விற்பனையானது. இருப்பினும் துவண்டுவிடவில்லை சுசீலா. தொடர்ந்து போராடினார். கடந்த 11 ஆண்டுகளாக போராடியதன் பலன் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் பூரணி மாவு வகைகள் என்றால் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பிரபலம். தூத்துக்குடியில் உள்ள சாதாரண கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து கடைகளிலுமே பூரணி மாவு வகைகள் கிடைக்கின்றன.
44 வகையான மாவு
உளுந்தங்களி, வெந்தயக்களி, கோதுமைபுட்டு, கோதுமை இடியாப்பம், கம்பு சோறு, கம்பு தோகை, கம்பு புட்டு, கம்பு மாவு, ராகி புட்டு, ராகி கூழ், ராகி தோசை, நவதானிய தோசை, சோள புட்டு, சோள தோசை, கான தோசை, ஹெல்த் மிக்ஸ், டி- புரோட்டின் மிக்ஸ், தினை மாவு, ஓமக்களி மாவு, மல்டி கிரைன் இடியாப்பம், மல்டி கிரைன் புட்டு, வரகு இட்லி, வரகு தோசை, சாமை தோசை, ராகி இடியாப்பம், ராகி முறுக்கு, ராகி சீவல், ரெடிமேட் கொழுக்கட்டை, வரகு கொழுக்கட்டை என 44 வாகையான மாவுகளை தயாரித்து விற்பனை செய்கிறார் சுசிலா.
ரூ.20 ஆயிரம் லாபம்
மாதம் சராசரியாக ரூ.1 லட்சம் வரையும், பண்டிகை காலங்களில் ரூ.2 லட்சம் வரையும் மாவு வகைகளை விற்பனை செய்யும் சுசீலா, அதன் மூலம் மாதம் ரூ. 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ள நிலையில், அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுசீலாவை சந்தித்தோம்.
அப்போது அவர் கூறும்போது, ‘11 ஆண்டுகளுக்கு முன் இந்த தொழிலை தொடங்கினேன். முதலில் யாரும் எனது தயாரிப்புகளை வாங்க முன்வரவில்லை. மனம் தளராமல் போராடினேன். தற்போது அதன் பலன் கிடைத்துள்ளது. எனது கணவர் மற்றும் குழந்தைகள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். எனது கணவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலை செய்ய முடியாமல் இருக்கிறார். நான் தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளேன்.
3 பெண்கள் என்னிடம் வேலை செய்கிறார்கள். மாவு வகைகளை நாங்களே சூப்பர் மார்க்கெட்டுகளில் கொண்டு கொடுப்போம். தூத்துக்குடியில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எங்கள் பூரணி பிராண்ட் மாவு வகைகள் கிடைக்கும். திருநெல்வேலியில் சில கடைகளில் கிடைக்கும்.
சென்னை வரை…
சென்னையில் வள்ளுவர் கோட்டம், தலைமை செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம் போன்ற இடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் எங்கள் மாவு வகைகள் இடம்பெறும்.
எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல், சுத்தமாக, சுகாதாரமாக மாவு வகைகளை தயாரித்து கொடுப்பதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. வீடுகளுக்கும் சிலர் எங்களிடம் நேரடியாக வாங்கி செல்வார்கள்.
மாவு வகைகளை தவிர சிறு தானிய வகைகளை அப்படியே பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்கிறோம். சிறு தானிய வகைகளை தூத்துக்குடி மார்க்கெட்டில் இருந்தும், தேனியில் இருந்தும் வாங்கி வருகிறோம். அவை தட்டுப்பாடில்லாமல் கிடைக்கின்றன.
நல்ல வரவேற்பு
சிறுதானிய மற்றும் பயிறு வகை உணவு பொருட்களுக்கு மக்கள் மத்தியில் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர். எங்கள் வியாபாரமும் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
சுக்குமல்லி காபி பொடி, கான பொடி, இட்லி பொடி போன்றவை மட்டுமே 50, 100 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற மாவு வகைகள், தானிய வகைகள் 200, 400, 500 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவைகளை மிக குறைந்த விலையில் தான் விற்பனை செய்கிறோம். எங்கள் மாவு வகைகளில் அதிகபட்ச விலையே ரூ.75 தான்.
வருங்கால திட்டம்
ஒரு காலத்தில் தானியங்கள், பயறு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போதைய அவசர உலகத்தில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்வதால் அவை ரெடிமேட் மாவுகளாக மாறியுள்ளன. வரும் காலத்தில் தின்பண்டங்களாகவே மக்கள் கேட்கும் நிலை ஏற்படும். எனவே, வரும் காலத்தில் சிறுதானியங்கள் மற்றும் பயறு வகையில் இருந்து தின் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT