Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
பாளையங்கோட்டை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளிவிடலாம் என்ற முக்கிய கட்சிகளின் கணக்கு இம்முறை தப்பவே வாய்ப்புள்ளது.
பாளையங்கோட்டை தொகுதியில் திருநெல்வேலி தாலுகாவின் ஒரு பகுதியும், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 5 முதல் 39-வது வார்டுகளும் இடம் பெற்றுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நூற்றாண்டு பழமையான கலை அறிவியல் கல்லூரிகள், நூற்றுக்கணக்கான பள்ளிகள் என்று ஏராளமான கல்வி நிலையங்கள், `தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பாளையங்கோட்டையின் அடைமொழிக்கு கட்டியம் கூறுகின்றன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சரக டிஐஜி அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் என்று பல்வேறு முக்கிய அரசுத்துறை அலுவலகங்களும், அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி புதிய பஸ்நிலையம், வ.உ.சி. மைதானம் என்று இத்தொகுதியை அடையாளப்படுத்தும் அம்சங்கள் ஏராளம் உள்ளன.
தப்புக் கணக்கு
இத்தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் 95 சதவீதத்துக்குமேல் முஸ்லிம்களே வசிக்கிறார்கள். இதுபோல், பாளையங்கோட்டை நகர்ப்புற பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மேலப்பாளையம் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களும் உள்ளனர். இத்தொகுதியில் ஆசிரியர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், பணிகளுக்கு செல்வோர் என்று நடுத்தர வர்க்கத்தினர் அதிமுள்ளனர். 1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இது இருந்தது. பின்னர், பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது.
இங்கு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். முக்கிய கட்சியான அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெரால்டு கிறிஸ்தவர். எதிர்முனையில் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் இஸ்லாமியர். இவர்களுக்கு போட்டியாக அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இஸ்லாமியரான முகம்மது முபாரக் நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த முக்கிய 3 கூட்டணிகளின் வேட்பாளர்களும் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்தே களம் காண்கிறார்கள். இதனால், இம்முறை வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் அதிகம். ஒட்டுமொத்தமாக வாக்குகளை அள்ளலாம் என்று யாரும் கணக்கு போட்டுவிட முடியாது.
பிரச்சினைகள் ஏராளம்
இத் தொகுதியில் முக்கிய போக்குவரத்து பகுதியான குலவணிகர்புரம் ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருக் கிறது. நகர்ப்புற பகுதிகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்பு களால் மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர்புகும் அபாயம் நீடிக்கிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினம்தினம் அவதியுறுகிறார்கள். அரசு சித்த மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் பாழடைந்து கொண்டிருக்கின்றன. இங்கு உரிய ஆராய்ச்சிப் பிரிவுகளை தொடங்கவும், விசாலாமான வேறு இடத்தில் இக்கல்லூரியை செயல்படவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலப்பாளையத்தில் சுகாதார சீர்கேடுகளால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். அடிப்படை வசதிகளே இல்லாத நிலை. பீடி தொழிலாளர்களுக்கான வாழ்வாதார மேம்பாடு கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
கடந்த 4 முறை இத்தொகுதியில் திமுக வெற்றிபெற்றபோதும், பெரியளவில் பணிகளை இத்தொகுதியில் நிறைவேற்றவில்லை. இது திமுக வேட்பாளர் வகாபுக்கு பின்னடைவு. எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக் தீவிர களப்பணியில் இருக்கிறார். வகாபுக்கான முஸ்லிம் வாக்குவங்கியை இவர் பிரிப்பார். அதேசமயம், தவ்ஹீத் ஜமா அத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் யாருக்கு ஆதரவு தரும் என்பது தெரியவில்லை.
கிறிஸ்தவரான அதிமுக வேட்பாளருக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகள் முழுமையாக கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அதுபோல், அனைத்து வேட்பாளர்களும் சிறுபான்மையினராக இருப்பதால், இந்துக்களின் வாக்குகள் என்னவாகப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
பாளையங்கோட்டை தொகுதியில் சிறுபான்மை யினத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி, சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளிவிடலாம் என்ற முக்கிய கட்சிகளின் கணக்கு இம்முறை தப்பவே வாய்ப்புள்ளது.
5 முறை வென்ற திமுக
1977 முதல் 2016 வரை இத்தொகுதியில் நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 முறை திமுகவும், 2 முறை அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த 2001, 2006, 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுக உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் வெற்றிபெற்றிருந்தார். முஸ்லிம் லீக் சார்பில் முகமது கோதர் மைதீன், விஎஸ்டி ஷம்சுல் ஆலம் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், பாளையங்கோட்டை தொகுதியில் கடந்த 4 தேர்தல்களிலும் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறுபான்மையினர் அளித்த ஆதரவே.
இக்காரணத்துக்காகவே, கடந்த பல தேர்தல்களிலும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே முக்கிய கட்சிகள் களமிறக்கி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT