Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
தென் மாவட்டங்களில் அமைந் துள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான முத்துநகரம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் நாட்டின் பெருந்துறைமுகங்களில் ஒன்றான வஉசி துறைமுகம் அமைந்துள்ளது. தூத்துக்குடி யைச் சுற்றி பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அனல்மின் நிலையங்கள் அதிகம் இருப்பதால் தொழில் நகரமாக விளங்குகிறது. உப்பு உற்பத்தியில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மீன்பிடித் தொழிலும் பிரதானமாக இருந்து வருகிறது.
2.84 லட்சம் வாக்காளர்கள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை மட்டும் உள்ளடக்கிய இந்த தொகுதியில் நாடார் சமு தாயத்தினர் சுமார் 32.5 சதவீதம் பேரும், அடுத்ததாக மீனவர்கள் (பர்னாண்டோ) 13 சதவீதம் பேரும் உள்ளனர்.
முஸ்லிம்கள் 7 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் 11 சதவீதம் பேரும், பிள்ளைமார் 7 சதவீதம் பேரும், தேவர் சமூகத்தினர் 3 சதவீதம் பேரும் உள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் 1,38,879 ஆண் வாக்காளர்கள், 1,45,232 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 53 பேர் என மொத்தம் 2,84,164 வாக்காளர்கள் உள்ளனர்.
1957 முதல் 2016 வரை நடை பெற்ற 14 தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக தலா 6 முறை வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு திராவி டக் கட்சிகளே தொடர்ந்து இத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பெ.கீதாஜீவன் 20,908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 88,045 வாக்குகள் கிடைத்தன. அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.த.செல்லப்பாண்டியன் 67,137வாக்குகளை பெற்றார். மக்கள்நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் பாத்திமாபாபு 17,798 வாக்குகளை பெற்றார்.தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எம்.ஆர்.கனகராஜ் 6,250 வாக்கு களையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.மரிய ஜூடி ஹேமா 3,733 வாக்குகளையும், பாமக வேட்பாளர் மு.சின்னத்துரை 1,069 வாக்குகளையும் பெற்றனர்.
திமுக-தமாகா நேரடி மோதல்
இந்த முறை திமுக கூட்டணி சார்பில் பெ.கீதாஜீவன் மீண்டும்போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் களத்தில் உள்ளார். இவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் யு.சந்திரன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக வேட்பாளர் என்.சுந்தர், நாம் தமிழர் கட்சி சார்பில் வேல்ராஜ் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.ஆனால்,திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கும், தமாகா வேட்பாளர் விஜயசீலனுக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
கீதாஜீவன் 2006 தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். 2011 தேர்தலில் தோல்வியடைந்த போதும், 2016 தேர்தலில்மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கிறார். தற்போது 4-வதுமுறையாக களம் இறங்கியுள்ளார். அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை எதுவும் பெரிய அளவில் இல்லை. மேலும், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவும் இம்முறை கூடுதலாக இருக்கிறது. அதேநேரம் 2 முறை வெற்றி பெற்ற போதும் தொகுதிக்கு பெரிய அளவிலான திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பாதகம் அதிகம்
தமாகா வேட்பாளர் விஜயசீலன் தேர்தலுக்கு புதிய முகம். தமாகாவுக்கு என இந்த தொகுதியில் பெரிய வாக்குவங்கி ஏதும் இல்லை. அதிமுக மற்றும்கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பியே அவர் களம் காணுகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அவருக்கு மிகப்பெரிய பலம்.
மேலும், கடந்த முறை தனித்து போட்டியிட்ட பாஜக, பாமக போன்ற கட்சிகள் இம்முறை கூட்டணியில் இருப்பதால் கூடுதல் பலம். அதேநேரத்தில் அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் அவருக்கு பாதகமான அம்சமாக கருதப்படுகிறது. மேலும், கூட்டணியில் பாஜக இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதில் சிரமம் நிலவுகிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு ஆகியவை கடந்த மக்களவை தேர்தலைப் போல வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.இந்த சவால்களுக்கு மத்தியில்முத்துநகரில் மகுடம் சூட்டப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள், துப்பாக்கிச் சூடு ஆகியவை கடந்த மக்களவை தேர்தலைப் போல வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT