Published : 19 Mar 2021 06:07 PM
Last Updated : 19 Mar 2021 06:07 PM
புதுச்சேரியில் 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ரங்கசாமி போட்டியிடும் ஏனாமில் வேட்பாளரை நிறுத்தாமல், 14 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டில் மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அக்கட்சி தனித்து ஒரு இடத்தில் மட்டும் போட்டியிடுகிறது.
இச்சூழலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட 15 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவித்தது. ஏனாம் தொகுதிக்கு அறிவிக்கவில்லை. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மாறிவிட்டார்.
அத்துடன் அவர் போட்டியிடாமல் ரங்கசாமியை அத்தொகுதியில் போட்டியிட அழைத்தார். ரங்கசாமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். இச்சூழலில் காங்கிரஸ் ரங்கசாமி போட்டியிடும் ஏனாமில் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை. அதனால் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றைத் தவிர்த்து 14-ல் மட்டுமே போட்டியிடுகிறது.
இதுபற்றி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, "கட்சியில் இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் வேறு கட்சிக்குச் சென்றுவிட்டார். அங்கு காங்கிரஸ் கட்சியில் ஒருவரை நிறுத்தப் பார்த்தோம். சுயேச்சை ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT