Published : 19 Mar 2021 03:11 PM
Last Updated : 19 Mar 2021 03:11 PM

நிலக்கரி கொள்முதல் டெண்டர்; தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

தமிழக மின்சார வாரியத்துக்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்குத் தடை விதிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் ஊழலைத் தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டுப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, மின்வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (மார்ச் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்தோனேசியாவில் இருந்து அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் கூறி, மனுதாரர் தரப்பில் பல ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், டெண்டருக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள், 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனச் சுட்டிக்காட்டிய அரசு தலைமை வழக்கறிஞர், தற்போது நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகளைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக போதுமான ஆவணங்கள் இல்லாததால் அரைவேக்காட்டுத்தனமான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

மேலும், நிலக்கரி இறக்குமதியில் ஏதோ தவறு உள்ளது என்பதை உணர்வதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் வசம் உள்ள ஆவணங்களை நிபுணர்களைக் கொண்டு ஆய்வுசெய்து, முறைகேட்டை நிரூபிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களைத தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x