Last Updated : 19 Mar, 2021 09:16 AM

 

Published : 19 Mar 2021 09:16 AM
Last Updated : 19 Mar 2021 09:16 AM

தஞ்சையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை; 14 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு- ஆட்சியர் தகவல்

தஞ்சையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர், "தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 185 மாணவ மாணவிகளுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படும். இதனைக் கண்காணிக்க மாவட்டத்தில் 14 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகளுக்கு இரு வார காலத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் 21 மாணவர்களுக்கு தொற்று:

ஆட்சியர் தீவிர கரோனா பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று ஒரே பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 8-ம் தேதி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்தப் பள்ளியில் படிக்கும் 1078 மாணவர்களுக்கும் 36 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மொத்தம் அந்த பள்ளியில் 58 மாணவிகள் ஒரு ஆசிரியர் 9 பெற்றோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் திருவாரூரில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலருக்கும் ஆலத்தூரில் உள்ள பள்ளியின் ஆசிரியர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பள்ளியில் படிக்கக் கூடிய 1,117 மாணவ மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இன்று 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 97 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தஞ்சை, கும்பகோணம், அம்மாபேட்டையில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும், 439 பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x