Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்க வாய்ப்பு உள்ளதால் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒன்று ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால் இத்தொகுதி எப்போதும் பசுமையாகக் காணப்படும். விவசாயம், தொழில் துறை இணைந்த வளர்ச்சியை இத்தொகுதியில் காண முடியும். இங்கு பஞ்சு ஆலைகள் அதிகம் உள்ளன. குறிப்பாக மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பேண்டேஜ் துணிகள் அதிக அளவில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆயத்த ஆடைகள் தயாரிப்பும் அதிகமாக நடைபெறுகிறது. நெல், பருத்தி, கரும்பு, தென்னை சாகுபடியும் இப்பகுதியில் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அய்யனார் கோயில் சுற்றுலாத் தலமும் இத்தொகுதியில் உள்ளது.
ராஜூக்கள் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க அளவு வசிக்கும் இத்தொகுதியில் மற்ற சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகின்றனர். ஏற்றுமதிக்கான தொழில் வரியைக் குறைக்க வேண்டும், பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், காட்டு விலங்கினங்கள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும், சித்துராஜபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் ஆகும். ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஜபாளையம் நகராட்சி, ராஜபாளையம் ஒன்றியம் மற்றும் வடக்குவேங்கநல்லூர், சம்மந்தபுரம், கொத்தங்குளம், செட்டிக்குளம், அயன்கொல்லங்கொண்டான் உட்பட 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊராட்சிகள் உள்ளன.
ராஜபாளையம் தொகுதியில் 1,16,258 ஆண் வாக்காளர்கள், 1,22,414 பெண் வாக்காளர்கள், 29 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,38,701 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் தங்கப்பாண்டியன் (திமுக), 2011-ம் ஆண்டு தேர்தலில் கே.கோபால்சாமி (அதிமுக), 2006-ல் எம்.சந்திரா (அதிமுக), 2001-ல் எம்.ராஜசேகர் (அதிமுக), 1996-ல் வி.பி.ராஜன் (திமுக), 1991-ல் டி.சாத்தய்யா (அதிமுக), 1989-ல் வி.பி.ராஜன் (திமுக), 1984-ல் கே.ராமன் (காங்கிரஸ்), 1980-ல்பி.மொக்கையன் (சுயேச்சை), 1977- ல் கே.தனுஷ்கோடி (அதிமுக), 1971-ல் கே.சுப்பு (இந்திய கம்யூனிஸ்ட்), 1967-ல் ஏ.ஏ.சுப்பராஜா (சுயேச்சை), 1962-ல் ரா.கிருஷ்ணசாமி நாயுடு (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன், அமமுகவில் காளிமுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயராஜ், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை பரப்புச் செயலர் விவேகானந்தன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வழக்கறிஞர் தனுஷ்கோடி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிவகாசி தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றது, அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றியம் திமுக வசமானது ஆகிய காரணங்களால் இந்த முறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.
ஆனால், அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக சென்ற சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனின் ஆதரவாளர்களாலும், அவரது சமுதாயத்தைச் சேர்ந்த வாக்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை சரிவடையச் செய்யலாம். இருப்பினும் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கப்பாண்டியன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக வேட்பாளரான தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ராஜபாளையம் நகர் பகுதி மட்டுமின்றி ஊரகப் பகுதியிலும் செல்வாக்குப் பெற்றவர். கடந்த 5 ஆண்டுகளாக மாதம்தோறும் தனது ஊதியத்தை ஏழைகள், ஊனமுற்றோர், தூய்மைப் பணியாளர்கள், முதியோருக்கு வழங்கியது, கரோனா காலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது ஆகிய செயல்களால் அடித்தட்டு மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT