Last Updated : 03 Nov, 2015 04:23 PM

 

Published : 03 Nov 2015 04:23 PM
Last Updated : 03 Nov 2015 04:23 PM

தேக்கமடையும் உள்நாட்டு துவரம் பருப்பு: இறக்குமதி ரகங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு

விலையேற்றத்தால் விலை குறைவாக உள்ள இறக்குமதி ரக துவரம் பருப்புகளை மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தரமான உள்நாட்டு உற்பத்தி துவரம் பருப்புகள் தேக்கமடைந்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் கடந்த மாதம் துவரம் பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு கிலோ ரூ.118 லிருந்து ரூ.225 வரை உயர்ந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து பருப்பு விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து 5 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, அதில் தமிழகத்துக்கு 500 டன் வழங்கப்பட்டது. இவை கடந்த 1-ம் தேதி முதல் விலை குறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 91 விற்பனை நிலையங்களில் கிலோ ரூ.110 க்கும், அரை கிலோ ரூ.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களில் துவரம் பருப்பை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவையில் உள்ள பருப்பு வியாபாரிகள் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் டிகே மார்க்கெட், பெரியகடை வீதி பஜார் மற்றும் சாய்பாபாகாலனி மார்க்கெட் ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 600-கும் அதிகமான பருப்பு மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கிருந்தே மாவட்டம் முழுவதும் உள்ள சில்லரை விற்பனைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 90 சதவீதம் அதிகமாக உள்நாட்டு உற்பத்தியான மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 50 டன் உள்நாட்டு உற்பத்தி துவரம் பருப்பு கோவையில் விற்பனையாகி வந்தது. உள்நாட்டு பருப்புகள் நல்ல தரமானவை.

குஜராத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் துவரம் பருப்புகள் விலை சற்று அதிகமாக இருந்தாலும் முதல் தரமுடையவை. எளிதில் வேகக்கூடியவை; நல்ல ருசி உடையது. இதனால் உள்நாட்டு பருப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. விலையேற்றம் ஏற்பட்டதால் மேற்கொண்டு கொள்முதல் செய்ய முடியாமல் இருப்பில் இருக்கும் பருப்பையே விற்க சிரமப்பட்டு வருகிறோம். சுமார் 75 சதவீதம் விற்பனை குறைந்துவிட்டது.

விலை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் மூட்டைகளில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்கூட கிலோ கணக்கில் வாங்குகின்றனர்.

வெளிநாட்டு ரகங்கள்

தற்போதுள்ள நிலையில் வெளிநாட்டு இறக்குமதி ரகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. கனடாவிலிருந்து இறக்குமதியாகும் மஞ்சள் மசூரி (லெண்டில்) எனப்படும் துவரம் பருப்பு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. ரெட்சூர் எனப்படும் இறக்குமதி ரகமும் கிலோ ரூ.90-க்கு விற்கப்படுகிறது. தான்சானியா, மாளவியா, கென்யா, பர்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பல்வேறு வகையான துவரம் பருப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை வெறும் பருப்பாக மட்டும் பார்க்க முடியுமே தவிர, தரத்தையோ, ருசியையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் விலை உயர்வால் வேறு வழியின்றி வெளிநாட்டு இறக்குமதி ரகங்களை வாங்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றாற்போல, மத்திய அரசும் வெளி நாடுகளிலிருந்து துவரம் பருப்பை இறக்குமதி செய்துள்ளது. அதையே தமிழக அரசு கிலோவுக்கு ரூ.110 என விலை நிர்ணயித்து விற்பனை செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி ரகங்களை விற்க முடியாமல் திணறி வருகிறோம். நல்ல தரமான உள்நாட்டு ரக துவரம் பருப்பு ரூ.174-க்கு விற்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் வந்தால் போதும் என கிலோ ரூ.170-க்கும் கொடுக்கிறோம். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

இருப்பு வைப்பதில் சிக்கல்

உள்நாட்டு உற்பத்தி துவரம் பருப்பை இருப்பு வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உற்பத்தியாளர்கள் அவற்றை பருப்பாக உடைக்காமல் துவரையாக மட்டுமே கிடங்குகளில் பாதுகாப்பர். தேவைப்படும்போது உடைத்து பருப்பாக விநியோகிக்கிறார்கள். ஆனால் பருப்பாக அதை இருப்பு வைக்க முடியாது.

அதேபோல், வாட் வரி விதிப்புக்கு முன்பு நகரப் பகுதியில் 2500 குவிண்டால் வரையும், புறநகர் பகுதியில் 1500 குவிண்டால் வரையும் இருப்பு வைக்க முடியும். ஆனால் தற்போதைய நிலையில் பதுக்கல் என்ற பெயரில் இருப்பு வைப்பது தடுக்கப்படுகிறது.

கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் தங்கதுரை கூறும்போது, ‘ருசி, தரம், வேகும் திறன் அனைத்திலும் உள்நாட்டு பருப்பு வகைகளே முன்னிலையில் இருக்கின்றன. விலையேற்றம் என்ற காரணத்துக்காக வெளிநாட்டு இறக்குமதியை ஊக்குவிக்கக்கூடாது. உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தினால் விலை குறைவதுடன், நாட்டின் உற்பத்தியும் பெருகி, தரமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x