Published : 05 Nov 2015 03:45 PM
Last Updated : 05 Nov 2015 03:45 PM
நூற்பாலைகளில் மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் கார்பன் குழாய் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கணிசமாக மின்சாரப் பயன்பாடு குறைந்து வருவதாக கோவையைச் சேர்ந்த இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றான இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, ராஜபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 310 நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. மின் சாரத்தை பிரதானமாகக் கொண்டு நூற்பாலைகள் இயங்கினாலும், ஆற்றல் சேமிப்பு அத்தியாவசிய மான ஒன்றாக மாறி வருகிறது.
இதனால் சாதாரண பல்புகளுக்குப் பதிலாக எல்இடி பல்புகளை மாற்றுவது, இயந்திரப் பழுதுகளை உடனடியாக மின்சார விரயமின்றி சரிசெய்ய ‘தெர்மல் இமேஜிங் கேமரா’ பயன்படுத்துவது, இஎம்எஸ் கருவி பொருத்தி மின்சாரப் பயன்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்வது என வெவ்வேறு விதமான மின் சிக்கன முயற்சிகளை நூற்பாலைகள் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் அடுத்தகட்ட முயற்சியாக, நூல் நூற்புக் கதிர்களில் நூல் சுழற்றும் பிளாஸ்டிக் குழாய்களுக்குப் பதிலாக எடை குறைந்த கார்பன் குழாய்களை பொருத்தும் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் மின்சாரத் தேவை பெருமளவு குறைவதாகவும், சிறு, குறு நூற்பாலைகள் கூட அதிக உற்பத்தியை ஈட்ட முடியும் எனவும் கூறுகின்றனர் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பினர்.
அமைப்பின் செயலாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
குறைவான மின்சாரப் பயன்பாடு மூலம் சூழல் மாசுபாடு, தொழில் நசிவு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தலாம். சோதனை முறையில், அமைப்பில் உள்ள அனைத்து மில்களிலும் எல்இடி பல்புகளை மாற்றினோம். இதனால் பெருமளவு மின்சாரச் செலவு மிச்சமாகிவருகிறது. இதேபோல், தெர்மல் இமேஜிங் கேமராவை 120 மில்களில் பயன்படுத்துகின்றனர். இதனால் இயந்திரங்களில் ஏற்படும் பழுது, வெப்பத்தால் உண்டாகும் அதிக மின் தேவை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. நூற்பாலைகளில் மின்சாரத்தை அளவிட்டுக் காட்டுவதற்கு இஎம்எஸ் என்ற கருவியில் இயந்திரங்கள் எடுத்துக் கொள்ளும் மின்சாரம் அளவு உடனுக்குடன் தெரிந்துவிடும்.
மின் சிக்கனத்தின் அடுத்த நகர்வாக, அதிக எடையுள்ள பாலி கார்பனைட் குழாய்களுக்குப் பதிலாக எடை குறைந்த கார்பன் குழாய்களை கதிர்களில் பொருத்தத் தொடங்கியுள்ளோம். நூற்பாலை இயந்திரக் கதிர்களில் எடை அதிகமுள்ள பாலிகார்பனைட், ஏபிஎஸ் என்ற குழாய்களை பயன்படுத்தி வந்தோம். எடை அதிகம் என்பதால் அதை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
நூல் சுழலும் குழாய் எடை குறைந்ததாக இருந்தால், அதற்கு குறைந்த அளவு மின்சாரம் போதுமானது. கார்பன் குழாய்களின் எடை சுமார் 38 கிராம் வரை மட்டுமே இருப்பதால் அந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். விமானத்தில் எடையைக் குறைப்பதற்காக இந்த மூலப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவைச் சேர்ந்த அகுல் குலானி என்பவர் இதை உருவாக்கியுள்ளார்.
ரூ.45 லட்சம் மிச்சம்
30,000 கதிர்கள் உடைய நூற்பாலையில் நாள் ஒன்றுக்கு 50,000 யூனிட் மின்சாரம் தேவை. ஸ்பின்னிங் பிரிவுக்கு மொத்தத்தில் பாதியளவு மின்சாரம் போய்விடும். அங்கு எடை குறைந்த கார்பன் குழாய்களை பயன்படுத்துவதால் சுமார் 10 சதவீத மின்சாரம் மிச்சமாகும். வருடத்துக்கு சுமார் ரூ.45 லட்சம் வரை சேமிக்க முடியும். மேலும் குழாயின் சுற்றளவும் குறைவு என்பதால் 5 சதவீத உற்பத்தி அதிகமாகும். இதை அமைப்பிலுள்ள அனைத்து நூற்பாலைகளிலும் செயல்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT