Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

அதிமுக ஆட்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்: அன்புமணி ராமதாஸ் கருத்து

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் வேட்பாளர் எம்.பிரகாஷை ஆதரித்து நேற்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அன்புமணி பேசியதாவது:

கரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அதிமுக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. இதை நான் இலவசமாக பார்க்கவில்லை. இது மக்களின் சுமைகளை குறைக்கும் அத்தியாவசிய திட்டங்கள்.

கடந்த காலங்களில் 3 அல்லது 4 அரசு பள்ளி மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். இந்தாண்டு அதிமுக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது தமிழக அரசு. பின் தங்கிய நிலையில் உள்ள அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம்.

ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெற்று அறிக்கை. பிரசாந்த் கிஷோர் சொல்கிறபடி, அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு விவசாயியான பழனிசாமியின் 4 ஆண்டு ஆட்சி, எந்த பிரச்சினையும் இல்லா ஆட்சி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார்.

தொடர்ந்து, அன்புமணி ஊத்துக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிறகு, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில், பூந்தமல்லி (தனி) தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.எக்ஸ். ராஜமன்னாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x