Published : 15 Nov 2015 12:28 PM
Last Updated : 15 Nov 2015 12:28 PM
இந்திய வானிலை மையம் மூலம் கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்புகள் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது..
''பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 37 இடங்களில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 27 இடங்களில் 40 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் முன்னேற்பாடாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெனரேட்டா மூலம் மின்சார வசதி செய்து தரவும் தேவையான இடங்களில் பெட்ரோமாஸ் விளக்குகளும் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல 5 படகுகள் எரிபொருள் மற்றும் இயக்குபவர்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் 3 குழுக்கள் மாவட்டத்திற்கு வரப்பெற்று தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் குடிநீரினை காய்ச்சி குடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்திய வானிலை மையத்தால் 3 நாட்களுக்கு கனமழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (16.11.2015) அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறை மூலம் போதுமான அளவிற்கு மருந்து மாத்திரைகள், தடுப்பு ஊசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் கனமழையினால் ஏற்படும் சேத விவரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1077-க்கும் மற்றும் 04142-220700 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்'' என ஆட்சியர் தெரிவித்தார்.
இன்று காலை நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 54.38 மிமீ, மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 104.5.மிமீ மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT