Published : 18 Mar 2021 06:42 PM
Last Updated : 18 Mar 2021 06:42 PM
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தாவிய பத்து பேருக்கு தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை வாய்ப்பு தந்துள்ளன.
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும் போட்டியிடுகிறது.
என்.ஆர்.காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், வேட்பாளர்களை அறிவிக்காமலேயே என்.ஆர்.காங்கிரஸில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துவருகின்றனர். இதில், அதிமுக, திமுக தவிர கட்சி தாவியவர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளன.
காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். அவர் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான்குமார் பாஜகவுக்கு தாவினார். அவர் காமராஜர் நகர் தொகுதியிலும், அவரின் மகன் விவிலியன் ரிச்சர்ட்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். என்.ஆர்.காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் காலாப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
என்.ஆர்.காங்கிரஸ்இலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த கார்த்திகேயன் ஊசுடு தொகுதியிலும், என்.ஆர்.காங்கிரஸில் இருந்து விலகிய வைத்தியநாதன் லாஸ்பேட்டையிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸிலிருந்து விலகிய தனவேலு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பாகூர் தொகுதியிலும், காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகிய ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். கட்சி தாவிய 10 பேருக்கு போட்டியிடுவதற்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் சீட் வழங்கியுள்ளன.
அதிக முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 8-வது முறையாக புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 1990-ம் ஆண்டு முதல்முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன்பின், 1991 முதல் 2006 வரை தொடர்ந்து 4 முறை தட்டாஞ்சாவடி தொகுதியிலும், 2011 தொகுதி மறுசீரமைப்பில் கதிர்காமம், இந்திராநகர் தொகுதியிலும், 2016-ல் இந்திராநகர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிக நாட்கள் புதுச்சேரியில் முதல்வராக இருந்தவரும் இவர்தான். வரும் தேர்தலிலும் தட்டாஞ்சாவடி, ஏனாமில் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் 9-வது முறையாக போட்டியிடுகிறார். 1985-ல் திமுக சார்பில் முதல்முறையாக போட்டியிட்டார். இதன்பின், தொடர்ந்து திருநள்ளாறு தொகுதியிலேயே போட்டியிட்டு வருகிறார். வெற்றி, தோல்வி என இரண்டையும் அவர் சந்தித்துள்ளார். தற்போதும் திருநள்ளாறு தொகுதியில் 9-வது முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
இதேபோல, நெடுங்காடு தொகுதியில் மாரிமுத்து 1991-ம் ஆண்டு முதல்முறையாக சுயேட்சையாக போட்டியிட்டார். தொடர்ந்து 7-வது முறையாக அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் 1991-ல் வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டார். தொகுதி மறுசீரமைப்பில் மங்களம் தொகுதிக்கு இடம்பெயர்ந்தார். தற்போது 7-வது முறையாக மங்களம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், எம்எல்ஏ சிவா ஆகியோர் 6-வது முறையாக தேர்தலை சந்திக்கின்றனர். அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், 1999-ல் புஸ்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் 2001 முதல் தொடர்ந்து 4 முறை உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது 6-வது முறையாக அவர் உப்பளம் தொகுதியில் தேர்தலை சந்திக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT