Published : 18 Mar 2021 06:37 PM
Last Updated : 18 Mar 2021 06:37 PM
தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற திமுகவே காரணம் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி:
"திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தேசிய அளவில் பாராட்டக்கூடிய நகரமாக, தமிழகத்தின் 2-வது வளர்ந்த நகரமாக திருச்சியை மாற்றுவோம். இங்கு நீண்டகால தேவையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். உய்யக்கொண்டான் வாய்க்காலை முழுமையாகச் சீரமைத்து, மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றுவோம். கோனக்கரை சாலையை விரிவுபடுத்தி மத்திய பேருந்து நிலையத்துடன் நேரடியாக இணைக்க நடவடிக்கை எடுப்போம்.
கரூர் பைபாஸ் சாலையிலிருந்து குடமுருட்டி, ஸ்ரீரங்கம், கொள்ளிடக் கரை வழியாக சென்னை பைபாஸ் சாலையை இணைப்பதற்கான சாலையை உருவாக்குவோம். வயலூர் சாலை, சீனிவாச நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நீதிமன்றத்திலிருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை வழியாக அல்லித்துறை வரை சாலையை உருவாக்குவோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்கும் என அதிமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர். நானும் மின்துறை அமைச்சராக இருந்துள்ளதால் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். 2006-11-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களுக்கு அதிகளவில் அனுமதி வழங்கப்பட்டது.
முதல்வர் பழனிசாமி தன்னுடைய காலத்தில், புதிதாக ஏதாவது ஒரு மின் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளாரா என தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். அதிமுக அரசு புதிதாக எந்த மின்திட்டத்தையும் உருவாக்கவில்லை. நாங்கள்தான் தொடங்கினோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுத்த அனுமதியின் காரணமாகவே பல மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கி, அதன்மூலம் இவர்களுக்கு மின்சாரம் கிடைத்தது. அதனால் அதிமுக ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக மாறியது. இங்கு காற்றாலை மின்சாரம் ரூ.3-க்கு கிடைக்கிறது. ஆனால் அதானியிடம் ரூ.7-க்கு மின்சாரம் வாங்குகின்றனர்.
இதெல்லாம் சரியா என தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் முயற்சி செய்யவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக மட்டுமே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
கடவுளாக இருந்தால்தான், ஒவ்வொரு தொகுதியிலும் அனைவருக்கும் பிடித்தமான வேட்பாளர்களை நிறுத்த முடியும். தகுதி, கட்சிக்குச் செய்த பணி, மக்கள் செல்வாக்கு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கொடுத்துள்ளோம். திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட கொடுக்கவில்லை சிலர் எனக் கூறுகின்றனர். திருச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய திருச்சி, கரூர் எம்.பி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளோம்.
மற்றொருபுறம் பெரம்பலூர் எம்.பி தொகுதியை இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கொடுத்துள்ளோம். எல்லாவற்றையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டு, நாங்கள் மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வாழ்க என்றா செல்ல வேண்டும்? திமுகவினரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமல்லவா?
இத்தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் முழுமையான ஒத்துழைப்பு உள்ளது. தொகுதி பங்கீட்டில் எனக்கு என்ன பணி ஒதுக்கினார்களோ, அதை மட்டுமே செய்தேன். வேட்பாளர்களை நான் தேர்வு செய்யவில்லை. இதுகுறித்து முடிவு செய்வது தலைவரின் அதிகாரம். அதுபுரியாமல் சிலர் என்னை திட்டினால், நான் வாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT