Published : 18 Mar 2021 04:09 PM
Last Updated : 18 Mar 2021 04:09 PM

எளிய மக்களின் குரல் சட்டப்பேரவையில் கட்டாயம் எதிரொலிக்கும்; அரசியலில் போராளியாக இருக்க முடியும்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் பேட்டி

கணவர் கருணாநிதியுடன் ஆட்டோவில் பிரச்சாரம் மேற்கொண்ட பொன்னுத்தாய்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். இவர் தன் கணவர் கருணாநிதியின் ஆட்டோவில் பயணித்து பிரச்சாரம் மேற்கொள்வதுதான் தற்போதைய அரசியல் களத்தின் டாப் வைரல்.

இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலம் பெண்கள் - குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும், உள்ளூர் பிரச்சினைகளுக்காகவும் தொடர் போராட்டங்களை நடத்தி பலவற்றில் வெற்றியும் கண்டவர் பொன்னுத்தாய். தற்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கிறார்.

மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான பலம் வாய்ந்த ராஜன் செல்லப்பாவை எதிர்த்துக் களம் காண்கிறார்.

'இந்து தமிழ் திசை' சார்பாக பொன்னுத்தாயிடம் பேசினோம்.

எளிய வேட்பாளர் என்ற அடையாளத்துடன் ஆட்டோவில் சென்று பிரச்சாரம் செய்கிறீர்கள். உங்களின் குடும்பப் பின்னணி என்ன?

எங்க அப்பா சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தியவர். என் அம்மா தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர். எங்கள் வீட்டில் நான்கு பெண்கள், 2 ஆண்கள். நான்தான் மூத்தவள். 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். 11-ம் வகுப்பு படிக்கும்போதே அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவைக் கற்றுக்கொடுக்கும் பணியில் இருந்தேன். அப்போது, இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்தது.

1994-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன். 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சாத்தூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். என்னுடைய அரசியல் பணி பாதிக்காமல், அதனை அனுமதிப்பவரைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாக நின்று, ஆட்டோ ஓட்டும் தோழர் கருணாநிதியைத் திருமணம் செய்தேன். அவரும் கட்சிப்பணியில் தான் இருக்கிறார். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் கல்லூரிப் படிப்பும், மகள் 9-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

பொதுவாழ்வில் இருக்கும் பெண்களுக்குத் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சுமையாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. உங்களுக்கு எப்படி?

நிச்சயமாக சுமை அல்ல. ஆரம்பத்தில் நான் பொது வாழ்க்கைக்கு வரும்போதுகூட என் அப்பா எதிர்த்தார். ஆண்களுடன் செல்வது, போராட்டத்துக்குச் செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. வீட்டில் நான் மூத்த பெண். நானே இப்படிச் சென்றால் மற்ற பெண்களின் நிலை என்னவாகும் என நினைத்தனர். அதன்பிறகு, ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது, மக்கள் நமக்கு ஆதரவு தருவதைப் பார்த்து பின்னர் தடுக்கவில்லை.

முன்பு எல்லோருடைய வீட்டிலும் கழிப்பறை இருக்காது. அப்போது நாங்கள் இருந்த பகுதியில் கழிப்பறை இருந்த இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதனை எதிர்த்து விடாப்பிடியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாகப் போராட்டம் நடத்தி, அதனை நிறுத்தினோம். சாத்தூர் நகராட்சியில் பிரதான தொழில் தீப்பெட்டி தொழிற்சாலைதான். அது எந்திரமயமானது. அதனை எதிர்த்து, நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதைப் பார்த்துத்தான் குடும்பத்தில் ஆதரவு கொடுத்தனர்.

திருமணத்துக்குப் பின், பெண் அரசியலில் இருப்பது என் மாமியாருக்கெல்லாம் புதுசுதான். நான் அரசியல் வாழ்வில் இருப்பதை அவர் விரும்பவில்லை. என் பணிகளைப் பார்த்தே பின்னர் அனுமதித்தார்.

தேர்தல் பிரச்சாரக் களத்தில் பெண் வேட்பாளர்களுக்காகக் குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்சாரம் செய்வது அரிது. உங்கள் குடும்பத்தில் எப்படி?

என் கணவர் கருணாநிதி, அரசியலில் இருக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்ற எண்ணத்துடன் என்னைத் திருமணம் செய்தவர். நான் அரசியலில் இயங்குவதற்கு முழு உதவியாக இருந்தவர் அவர்தான். குடும்ப ஜனநாயகம் எங்கள் வீட்டில் முழுமையாக அமலாகும். என் கணவர் சமையல் செய்வார், துணி துவைப்பார், பாத்திரம் கழுவுவார். எல்லா வேலைகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார். அதனால்தான் என்னை முழுமையாக அரசியல் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது. வருமானத்தையும் ஏற்படுத்தி, வீட்டையும் கவனிக்கக்கூடியவராக அவர் இருந்தார்.

என் குடும்பமே எனக்கு உறுதுணையாக இருக்கிறது. என் மகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இருக்கிறார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் பணியாற்றுவதைவிட அவர்கள் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

அரசியலில் இருக்கும் பெண்கள் மீது தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் தொடர்கின்றன. அதனை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அரசியலுக்கு வரத் தயங்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

தாக்குதல்கள் எல்லாம் ஆணாதிக்கச் சமூகத்தில் வரத்தான் செய்யும். ஏதாவது ஒரு இடத்தில் அவை வெளிப்படத்தான் செய்யும். நான் கண்டுகொள்வதில்லை. நம் பணிகள் சார்ந்து நம்மைப் புரிந்துகொண்டவர்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பதில்லை. தெரியாதவர்கள் நம்மைப் பேசுவார்கள். இன்றைக்கு இருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில், நுகர்வு கலாச்சாரத்தில், அரசியலில் வன்முறை இருக்கும். பெண்கள் வரக்கூடாது என அவர்கள் ஒதுங்கி இருக்கின்றனர். சரிபாதியாக இருக்கும் பெண்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அப்படியென்றால் அரசியலுக்குள் நடக்கும் போராட்டங்களிலும் நாம் பங்கெடுக்க வேண்டும்.

அதிமுக மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியிலும் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறதே?

அரசியல் கட்சிகள் கட்டாயம் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டப்பேரவையில் குரல் கொடுப்போம்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மாதர் சங்கம் உடனடியாக குரல் கொடுப்பதில்லை, போராடுவதில்லை என்ற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"மாதர் சங்கம் எங்கே போச்சு?" என எப்போதும் கேள்வி எழுப்புகின்றனர். எங்கு வன்கொடுமை நடந்தாலும் உடனடியாக மாதர் சங்கம் தலையிட்டு நாங்கள் போராட்டம் நடத்திய சூழல் கூட விமர்சிப்பவர்களுக்குத் தெரியவில்லை. விமர்சிப்பவர்கள் பலரும் ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு, கணினி, செல்போன்களின் மூலம் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்பவர்களே.

ஏன் ஆட்டோவிலிருந்து பிரச்சாரம் மேற்கொண்டீர்கள்? கமலும், வானதி சீனிவாசனும் கூட ஆட்டோவில் பிரச்சாரம் செய்கிறார்களே?

பெரிய பெரிய ஆட்களெல்லாம் வேட்புமனுத் தாக்கலின்போது எங்களிடம் சொந்தமாக கார் இல்லை என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள்கூட எங்களிடம் சொந்தமாக கார் கூட இல்லை எனச் சொல்லியிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் எங்களிடம், சொந்தமாக ஆட்டோ இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கத்தான் ஆட்டோவில் பிரச்சாரத்தைத் தொடங்கினோம். நாங்கள் எங்கள் வேட்புமனுவில் எங்களிடம் உள்ள ஆட்டோவைக் குறிப்பிட்டோம். அவர்கள் தங்களிடம் உள்ளதை மறைத்து வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது நாங்கள் எங்களிடம் உள்ளதை வெளிப்படையாகத் தெரிவிக்கவே இந்த ஆட்டோ பிரச்சாரம்.

கமலும் வானதியும் விளம்பரத்துக்காக இன்றைக்கு ஆட்டோவில் பிரச்சாரம் செய்கின்றனர். எங்களின் வாழ்க்கையே ஆட்டோவில்தான். நாங்கள் அனுதினமும் ஆட்டோவில்தான் பயணம் செய்கிறோம். கமலும் வானதியும் தங்கள் வாழ்க்கையில் ஒரு நாளாவது ஷேர் ஆட்டோவில் சென்றிருப்பார்களா எனத் தெரியாது. எங்கள் வாழ்க்கை ஆட்டோவை வைத்துதான் ஓடுகிறது. அதனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.

பண பலம், அதிகார பலம் தாண்டி உங்களைப் போன்ற எளியவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?

கட்டாயம் நம்புகிறோம். அவர்கள் அதிகார பலத்தையும் பண பலத்தையும் நம்பி நிற்கின்றனர். நாங்கள் மக்கள் பலத்தை நம்பி இருக்கிறோம். விலையேற்றம், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேளாண் சட்டங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதனால் நாங்கள் வெற்றி பெறுவோம். பணமெல்லாம் பின்னுக்குத்தான் போகும். கட்டாயம் எளியவர்கள் ஜெயிப்பார்கள். மார்க்சிஸ்ட் கட்சியில் தோழர் கே.பி.ஜானகியம்மாள் தொடங்கி, மோகன், நன்மாறன் என எளிய மக்கள்தான் போட்டியிட்டு ஜெயித்து எளியவர்களின் பிரதிநிதிகளாக சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கின்றனர். மார்க்சிஸ்ட் சார்பாகப் போட்டியிடும் யாரும் கோடீஸ்வரர்கள் அல்ல, மக்கள் பணியாளர்கள்தான். இனிவரும் காலத்திலும் ஏழ்மையானவர்கள் களத்தில் போட்டியிடுவார்கள்.

பிரச்சாரம் என்பதே செலவுகரமானதுதான். உங்களுக்கான செலவுகளை எப்படிச் சந்திக்கிறீர்கள்?

எங்கள் வேட்பாளர்கள் சல்லிப் பைசா சொந்தமாகச் செலவு செய்ய மாட்டார்கள். எங்கள் தேர்தல் செலவுகள் எல்லாவற்றையும் கட்சிதான் கவனித்துக்கொள்ளும். எங்களுக்கு எந்தக் கவலையுமே இல்லை. வாக்குகளைச் சேகரிப்பது மட்டுமே என் பணி.

போராட்டக் களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு வந்துள்ளீர்கள். போராட்டம், தேர்தல் அரசியல் இரண்டில் எது வலுவான களம் எனக் கருதுகிறீர்கள்?

மக்கள் மன்றத்தில் பல போராட்டங்களை, இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்வது அவசியம். அதுதான் பல சட்டங்களை வகுக்கிற இடம். எங்களைப் போன்று இருக்கும் களப்போராளிகள், நேர்மையான ஆட்கள் உள்ளே போகிறபோது மக்களின் உண்மையான நிலவரம் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திமுக ஆட்சியமைத்தால், அந்த அரசில் பெண்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான குரலை சட்டப்பேரவையில் வலுவாக, சுதந்திரமாக ஒலிக்க முடியும் என நம்புகிறீர்களா?

கட்டாயமாக, அநியாயம் வன்முறை எங்கு நடந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுப்போம். பாலபாரதி, நன்மாறன் போன்றோர் ஆட்சியில் பங்கெடுத்திருந்தாலும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். நாங்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் குரல் கொடுப்போம். சுதந்திரமாகச் செயல்படுவோம். மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை.

உங்கள் தொகுதிக்கான உங்களின் வாக்குறுதிகள் என்ன?

கடந்த ஆட்சியில் எந்த அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. ஒரு அரசு கலைக்கல்லூரி கூட இத்தொகுதியில் இல்லை. கல்லூரி தொடங்க முயற்சி எடுப்பேன். இது விவசாயப் பகுதி. 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, கூலியை ரூ.400 ஆக உயர்த்த குரல் கொடுப்பேன். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை சுற்றுலாத் தலமாக அறிவித்து அங்குள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பேன். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவேன். அவனியாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்பட வைப்பேன்.

அதிமுகவின் ராஜன் செல்லப்பா வலுவான வேட்பாளராக இருக்கிறாரே?

அவர் பணத்தை மட்டுமே வலுவாக நம்பி இருக்கிறார். அவர் வலுவான வேட்பாளர் இல்லை. எங்களிடம் மக்கள் பலம் இருக்கிறது. வலுவான கூட்டணி பலம் இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எங்கள் அணி அவசியம் வெற்றி பெறும். மேயராக, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதும் அவர் ஒன்றும் செய்யவில்லை.

கடந்த ஆட்சியில் அவையில் இடதுசாரிகள் இல்லை. இம்முறை ஜெயித்தாலும் குறைந்த பிரதிநிதித்துவமே இருக்கும். சட்டப்பேரவையில் இடதுசாரிகளின் குரல் ஏன் முக்கியம் என நினைக்கிறீர்கள்?

இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம் இல்லாததால் மக்கள் பிரச்சினைகள் கூடுதலாக சட்டப்பேரவையில் எதிரொலிக்காத சூழல் இருந்தது. இனிவரும் காலத்தில் எளிய மக்களின் குரல் கட்டாயம் எதிரொலிக்கும்.

நீங்கள் போராளியா? அரசியல்வாதியா?

அரசியல்வாதியாக இருந்தால் கட்டாயம் போராளியாக இருக்க வேண்டும். போராளியாக இருந்தால் அரசியல்வாதியாக இருக்க வேண்டும். அரசியலில் கட்டாயம் போராளியாக இருக்க முடியும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x