Published : 18 Mar 2021 01:57 PM
Last Updated : 18 Mar 2021 01:57 PM
கூடுதலாக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று (மார்ச் 17) பிற்பகல் கரோனா நோய்த் தொற்று தொடர்பாக விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
" * கரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்துவதற்காக, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
* ஏற்கெனவே உள்ள 761 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
* தடுப்பூசி குப்பிக்கு (Vaccine dose) ஏற்றவாறு நபர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடவும், தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
* ரோட்டரி கிளப் போன்ற தடுப்பூசிப் பணிகளில் அனுபவம் மிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
* நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏற்கெனவே செயல்படுத்தியவாறு, கூடுதலாக ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
* நோய்த்தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து, பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இருந்தால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய் ஏற்படக் காரணமாக இருக்கும் நபர்கள் (Index Number) மூன்றுக்கு மேல் இருந்தால், தற்போதுள்ள நடைமுறைப்படி, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு தெருவில் அல்லது குடியிருப்புகளில் மூன்று நபர்களுக்கு மேல் நோய்த்தொற்று இருந்தால், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து, அங்கே உள்ளவர்களுக்கும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
* கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுக்குழாய் இருக்கும் இடம், குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டிகள், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாகத் தெரியும்படி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து செயலாக்க முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
* கோவிட் கவனிப்பு மையங்களைப் பொறுத்தமட்டில், தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தலைமைச் செயலாளர் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்படுத்தி, நோய் தொற்றுகள் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்".
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT