Published : 18 Mar 2021 01:10 PM
Last Updated : 18 Mar 2021 01:10 PM
காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக மாட்டு வண்டியில் வந்து சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
காரைக்காலைச் சேர்ந்த வெங்கடேஷ் அனந்தகிருஷ்ணன் என்பவர், காரை சிறகுகள் என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இவர், நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலில் காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து காரைக்கால் துணை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.ஆதர்ஷிடம் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இளைஞர்கள் பலரை ஒன்றிணைத்து காரை சிறகுகள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். புதுச்சேரி மாநிலத்திலேயே காரைக்கால் வடக்குத் தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதியாக உள்ளது.
சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. இதுவரை பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்நிலையை மாற்றும் வகையில் நான் போட்டியிட வேண்டும் என இளைஞர்கள் பலர் கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக மாட்டு வண்டியில் வந்தேன்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT