Published : 18 Mar 2021 01:12 PM
Last Updated : 18 Mar 2021 01:12 PM
பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதற்றமும் வருகிறது என்று கமலின் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார். திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.
எதிர்க்கட்சிகள் பலவும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கடுமையாக விமர்சித்தன. இந்த வீடியோ பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் தனது ட்விட்டர் பதிவில், "தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் தொடங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாகக் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்" என்று குறிப்பிட்டார்.
இந்தப் பதிவினால் திமுக - மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. கமலின் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், "கரூர் மாவட்டத்தில் 15,000 மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆளுங்கட்சி அமைச்சரின் எதேச்சதிகார அடக்குமுறையை எதிர்த்து, என் மாவட்ட மக்களின் குரலாக, என் குரல் எதிரொலித்ததைக் கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதற்றமும் வருகிறது?" என்று தெரிவித்துள்ளார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
இந்த ட்வீட்டுடன் ஆற்றுமணல் அள்ளுவது தொடர்பான பேச்சு தொடர்பான பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார் செந்தில் பாலாஜி.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"எங்களைச் சுற்றி இருக்கக் கூடிய நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. எங்கள் கரூரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இந்த மாட்டு வண்டிகளை நம்பி பிழைப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்த 15 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்துக்கு அனுமதி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களில் ஒரே மாதிரி அனுமதி கொடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் எதற்காக இந்த அனுமதி மறுக்கப்படுகிறது என்று சொன்னால், கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சாண்ட் குவாரி வைத்துள்ளார். மாட்டு வண்டி உரிமையாளர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அரசும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.
5 குவாரிகளின் அனுமதிக்குக் காத்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் வாக்குறுதி என்பது நாமக்கல், திருச்சி மாவட்டங்களைப் போல கரூர் மாவட்டத்துக்கும் அரசாணை வெளியிடப்பட்டு மணல் குவாரிகள் முறைப்படுத்தப்படும்.
மாட்டு வண்டி உரிமையாளர்களுக்குப் பொதுத்துறை அனுமதிச் சீட்டு வழங்கப்படும். கொள்ளைப் புறமாக நடைபெறும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்திருந்தேன். கமல்ஹாசன் மாதிரி ஒருவர் என்ன சொல்றோம் என்பதைத் தெரிந்து பேச வேண்டும். கமல் கட்சியின் இந்தத் தொகுதி வேட்பாளரை தைரியமாகப் பேசச் சொல்லுங்களேன்.
இதன் பின்னணியில் அதிமுக, பாஜக இருக்கிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர்களை இங்கே பேசச் சொல்லுங்களேன். நாங்கள் மணல் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று தைரியம் இருந்தால் பேசச் சொல்லுங்கள். முறைப்படுத்த மாட்டோம் என்று சொல்லச் சொல்லுங்கள். ஏன் இங்கு ஒன்று, அங்கு ஒன்று பேசுகிறார்கள்.
எங்களுடைய தெளிவான முடிவு. திமுக ஆட்சி நிச்சயமாக அமையும். தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார். இந்த மாட்டுவண்டியில் மணல் எடுப்பதற்கு முறைப்படி நடைமுறைகள் பின்பற்றப்படும். அரசாணை வெளியிடப்பட்டு பொதுத்துறை மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்".
இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 15,000 மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக, ஆளுங்கட்சி அமைச்சரின் எதேச்சதிகார அடக்குமுறையை எதிர்த்து, என் மாவட்ட மக்களின் குரலாக, என் குரல் எதிரொலித்ததை கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதட்டமும் வருகிறது? https://t.co/CRpdVh4Vx8 pic.twitter.com/RgYcmFj3Ib
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) March 17, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT