Published : 18 Mar 2021 12:20 PM
Last Updated : 18 Mar 2021 12:20 PM
சொல்கிற இடத்தில் இருந்தேன். தற்போது செய்கிற இடத்துக்கு வந்துள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று திமுக வேட்பாளரும், மருத்துவருமான எழிலன் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக மருத்துவர் எழிலன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எழிலன் பேசும்போது, “அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு கழகப் பணியாளர்கள் முன்பிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த உழைப்பை வாக்குகளாகப் பெறும் முயற்சியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
சமூகச் செயற்பாட்டளாரான நான் முன்பு சொல்கிற இடத்தில் இருந்தேன். தற்போது செய்கிற இடத்துக்கு வந்துள்ளேன். அதற்கான முழுமையான வாய்ப்பை மக்கள் அளிப்பார்கள் என்று நம்புகிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கை நிச்சயம் வெற்றி தரக் கூடியது.
தேர்தல் களத்தில் குஷ்பு சினிமா பிரபலம் என்பது அவருக்குச் சாதகமான ஒன்றுதான். குஷ்புவைப் பெண்ணியவாதியாக நான் மதிக்கிறேன். நான் எனது சமூகப் பணியை நம்புகிறேன். மக்கள் பணி அளவுகோலாக வரும்போது நல்ல போட்டியாக அமையும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆயிரம் விளக்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் குஷ்பு பேசும்போது, “ஆயிரம் விளக்கு தொகுதி திமுக கோட்டை இல்லை. நான் எந்த எதிர்க்கட்சி வேட்பாளரையும் குறைவாக எண்ணவில்லை. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களுக்கு நிறைய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. உழைப்பதற்கு நான் முன்வந்திருக்கிறேன். இவ்வாறு இருந்தால் நிச்சயம் நான் வெற்றிக்கொடியை நோக்கிச் செல்வேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT