Published : 18 Mar 2021 11:14 AM
Last Updated : 18 Mar 2021 11:14 AM
'விஸ்வரூபம்' பட விவகாரத்தில் அரசு இடையூறு தராமல் இருந்திருந்தால், தனது சொத்து மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத் குமாரின் சமகவும் இணைந்து களத்தில் போட்டியிட உள்ளது.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டிக் கோவையில் முகாமிட்டிருக்கும் அவர், தனது கட்சி சார்பில் மேற்கு மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் நேற்று இரவு வாக்குச் சேகரித்த கமல், ''தற்போது ஆட்சியில் இருக்கும் இந்த அரசு, 'விஸ்வரூபம்' பட விவகாரத்தில் இடையூறு தந்தது. அவர்கள் இடையூறு கொடுக்காமல் இருந்திருந்தால் என்னுடைய வருமானம், சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கும். அது இல்லாமல் போனதுக்கு இந்த அரசுதான் காரணம்.
அவர்கள் என்னிடம் கொள்ளை அடிக்கவில்லை. ஆனால் தடுத்து விட்டதிலேயே அவ்வளவு நஷ்டம் எனக்கு. ஆனால் அந்தக் கோபத்தில் நான் இங்கு வரவில்லை. இதுபோல் எத்தனையோ பேர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன்'' என்று கமல் தெரிவித்தார்.
கமல்ஹாசன் தனது வேட்பு மனுவில் அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் எனவும், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து 1,476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 மதிப்பில் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT