Published : 18 Mar 2021 10:45 AM
Last Updated : 18 Mar 2021 10:45 AM
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. பாமக தனித்துப் போட்டியிடுகிறது.
30 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடவில்லை. காரைக்கால் வடக்கு தொகுதியில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த ஏ.வி.சுப்பிரமணியத்திடம் நாராயணசாமி போட்டியிடாதது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ''புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த முறையும் தேர்தலில் போட்டியிடவில்லை. போன முறையும் போட்டியிடவில்லை. தேர்தலில் களம் காண அவரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் 'என்னுடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வயதாகிவிட்டதால் நடக்க முடியவில்லை. நான் கட்சியைப் பார்த்துக் கொள்கிறேன். கட்சியைப் பின்னால் இருந்து சுறுசுறுப்பாக இயக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்' என்று தெரிவித்தார். அதனால்தான் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடவில்லை'' என்று தெரிவித்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாராயணசாமி முதலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் வென்ற பிறகு, முதல்வர் பதவியில் அமர்ந்தார் நாராயணசாமி. அதன் பிறகே நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்காக ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்தார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிடாமல் அதற்குப் பிறகான இடைத்தேர்தலில் போட்டியிடுவது நாராயணசாமியின் பாணி என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT