Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
சென்னையில் தி.நகருக்கு அடுத்து வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதி மயிலாப்பூர். மயிலையில் கயிலை எனப்படும் கபாலீஸ்வரர் கோயில் இந்ததொகுதியின் அடையாளம். மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ். இந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் இவரே களம் காண்கிறார். நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு தொகுதியில் இருந்த அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
அதிமுகவில் பலகாலம் இருந்தவர்கள் பலருக்கே தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்காத நிலையில், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான தங்களுக்கு மீண்டும் மயிலாப்பூரில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்கு என்ன காரணம்?
நான் செய்துள்ள பணிகள்தான். அதன் பிறகு கட்சித் தலைமையும் கள நிலவரம் தொடர்பாக அறிந்து வைத்துள்ளார்கள். அதனால்தான் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளனர். மயிலாப்பூரை பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளில், 2001-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் பின் நடைபெற்ற 3 தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது. தொகுதி அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். அதை நிச்சயம் தக்க வைக்க முடியும். அதிமுகவுக்கு ஆதரவும் உள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப்போவதாக கூறப்பட்டது. ஒரு வேளை அவர் போட்டியிட்டிருந்தால்?
அவரால் எந்த பிரச்சினையும் இல்லை. அவரைப்போல் நானும் மயிலாப்பூர்காரன். எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். நான் மாநகர காவல்துறை ஆணையராக இருந்தபோது மக்களிடம் நல்ல பரிச்சயம் உண்டு. அவரையும் நான் சந்தித்துள்ளேன். அவர் போட்டியிட்டிருந்தால் நல்ல போட்டியாக இருக்கும். எந்த வேட்பாளர் மக்களுக்கு சுயநலமின்றி உதவி செய்ய தயாராக உள்ளாரோ அவர் தான் வெற்றி பெறுவார். நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும். அரசியல் களம் மிகச்சிறந்த களம்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் உங்களை எதிர்த்து நிற்கும் ஸ்ரீபிரியாவை எப்படி பார்க்கிறீர்கள்?
வேட்பாளர் ஸ்ரீபிரியாவின் நடிப்பு எனக்கு பிடிக்கும். அவரை நான் மதிக்கிறேன். தேர்தல் களத்தில் அவரை சிறந்த போட்டியாளராக பார்க்கிறேன்.
அதிகாரியாக இருந்து அரசியல்வாதியானதால் உங்களை எளிதில் அணுகமுடியவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து?
இந்த கருத்து முன்பு இருந்தது. தற்போது இல்லை. என் அலுவலகத்தை நான் முழு நேர அலுவலகமாக வைத்துள்ளேன். அதுமட்டுமின்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உடனடியாக பிரச்சினைகளை தீர்ப்பதுதான் என் பணி. மேலும், என் தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளிலும் தனித்தனி குழுக்களை நியமித்துள்ளேன். அவர்கள் மக்கள் பிரச்சினைகளை ‘வாட்ஸ்அப்’ மூலம் தெரியப்படுத்துவார்கள். அதன்மூலம் அவை தீர்த்து வைக்கப்படும். இவ்வாறாக திட்டமிட்டு பணிகளை முடித்துள்ளேன். அரசின் மூலம் பெரிய பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், சிறு சிறு பணிகளை பல நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதிகள் மூலம் முடித்துள்ளேன். மழை நீரை நிலத்துக்கு அனுப்பும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்ட பணிகள் பாராட்டப்பட்டுள்ளன. நான் அடிப்படையில் களப்பணியாளன். மக்களை சந்திப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிட்டீர்களா?
தொகுதி மேம்பாட்டு நிதி 5 ஆண்டுகளுக்கு ரூ.10 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.12 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 அல்லது இரண்டரை கோடி அளவுக்கு எடுத்து அதில் பணிகள் மேற்கொண்டுள்ளேன். மேலும், இதில் கிடைத்த வட்டியில், ரூ.78 லட்சம் வரை பணிகளுக்காக செலவிட்டுள்ளேன். இதற்காக நிறைய முயற்சிகள் எடுத்துள்ளேன். ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் உள்ளிட்ட பல பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.
தொகுதியின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து?
கடைக்கோடி பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் பிரச்சினை உள்ளது. இதை மாற்றி அவர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றி அவர்களுக்கு அதே பகுதியில் குடியிருப்பு வழங்க வேண்டும். விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, பல வகை விளையாட்டுகளுக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பது போன்ற திட்டங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT