Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

கூடலூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கியது கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி. பொது தொகுதியான இது, 2011-ல் மறுசீரமைப்புக்கு பின்னர் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

சுற்றுலாவுக்குப் போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேரளா, கர்நாடக மாநில எல்லைகளில் இந்த தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு அந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

இங்கு தாயகம் திரும்பியோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

இத்தொகுதியின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று பிரிவு-17 நிலப் பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மனித-விலங்கு மோதல்கள் ஆகியவை ஆகும். பிரிவு 17 நிலங்கள் வகைப்படுத்தப்படாததால், அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 10 ஆயிரம் வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

மேலும், யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 50 பேர் யானை உள்ளிட்ட விலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியில் மசினகுடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளதால், வணிக ரீதியான வளர்ச்சிப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவு படுத்த வேண்டும், சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களும் இதுவரை நிறைவேறவில்லை.

இத்தொகுதியில் திமுகவைச் சேர்ந்த க.ராமசந்திரன் 2006, 2011 தேர்தல்களிலும், 2016-ல் மு.திராவிடமணியும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இதுவரை தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்கிறார் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்.

அவர் மேலும் கூறும்போது, "அதிமுகவை சேர்ந்த மில்லர் எம்எல்ஏ-வாக இருந்த போதுதான் கூடலூரில் கல்லூரி கொண்டுவரப்பட்டது. பிரிவு 17 நிலங்கள் பிரச்சினை, பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்றார்.

திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம் கூறும்போது, "இத்தொகுதிதிமுக வசம் என்பதால், அதிமுகஅரசு கடந்த 10 ஆண்டுகளாகதொகுதியைப் புறக்கணித்துள்ளது. இம்முறை திமுக அரசு அமையும் பட்சத்தில், கூடலூர் தொகுதிக்குத் தேவையானவற்றைப் பெறமுடியும் டான்டீ தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிரந்தரக் குடியிருப்பு, கூடலூரில் மின்சாரப்பற்றாக்குறை, குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், மனித-விலங்குகள் மோதலைத் தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணப்படும். கூடலூரில் வாகன நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேதீஸ்வரன் கூறும்போது, "டான்டீ நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளர்களை, பணியிலிருந்து நிறுத்திவிட்டனர். தொழிலாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடனே, வீடுகளைக் காலி செய்ய நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. வன விலங்குகள் மோதலில் சிக்கி, பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x