Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிசீலனை: வடமதுரையில் மு.க.ஸ்டாலின் உறுதி

வடமதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் மு.க.ஸ்டாலின்.

திண்டுக்கல்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன், நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து வடமதுரையில் நேற்று காலை ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நத்தம் தொகுதியில் வாக்காளர் களுக்குப் பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். வேண்டாம் என்றுசொல்ல வேண்டாம். அது உங்கள் பணம்.

நீட் தேர்வு வருவதற்குக் காரணம் திமுகதான் என்ற குற்றச்சாட்டை முதல்வர் கூறி வருகிறார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது தமிழகத்துக்கு நீட் வரவில்லை. இவரது ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது.

இந்தத் தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி இரண்டுமே திமுக தேர்தல் அறிக்கைதான். பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ வன்னியர்கள் என்னை நேரில் சந்தித்து இடஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி, வேலுச்சாமி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x