Published : 15 Mar 2014 03:43 PM
Last Updated : 15 Mar 2014 03:43 PM
"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் புளுகு மூட்டை" என தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, அவர் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்கு முன், தேர்தல் வாக்குறுதிகளை புளுகு மூட்டைகளாக அவிழ்த்து விட்டுள்ளார். வருமான வரி உச்சவரம்பு ரூ. 6 லட்சமாக உயர்த்தப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. இதுவரை இதனை ஏன் செய்யவில்லை?
`அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் நாளில் பெறும் பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரிவிலக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது வெத்துவேட்டு வாக்குறுதி. இவற்றுக்கு, ஏற்கெனவே வருமான வரி விலக்கு உள்ளது.
அந்நிய முதலீடு
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதை ஆதரித்துவிட்டு, தற்போது எதிர்ப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. மத்திய அரசில் கொள்கை வகுக்கும் இடத்துக்கு அ.தி.மு.க. வந்தால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும்.
மீனவர் நலன்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட போது அலட்சியமாக இருந்த கருணாநிதி, மீண்டும் போலி வாக்குறுதிகளை அளித்திருப்பது பித்தலாட்டத்தின் உச்சக்கட்டம்.
அயோத்தி கரசேவை
அயோத்தி கரசேவைக்கு நான் ஆள் அனுப்பியதாக கருணாநிதி கூறியுள்ளார். நான் யாரை அனுப்பினேன் என்று கூறமுடியுமா? தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் பல்வேறு தூரோகங்களை செய்த காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு துணை போன தி.மு.க. வுக்கும் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT