Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கடந்த தேர்தலின்போதே தமிழக அளவில் மிகுந்த கவனம் பெற்றது. இதற்கு காரணம், இத் தொகுதியில் 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு தான். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் இத்தேர்தலில் மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.
ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒட்டுமொத்த பகுதியையும்இத்தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களும் இத்தொகுதியில் தான் இருக்கின்றன.
மீனவர்கள் நவீன விசைப் படகுகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் நாட்டுப் படகுகளில் தான் தற்போதுவரை மீன் பிடித்து வருகின்றனர். கூடங்குளம் அணுஉலைகள், மகேந்திர கிரியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க உந்தும வளாகம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள்.
மேலும், இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகளவில்காற்றாலைகள் இருக்கின்றன.நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் உள்ள கடலோர கிராமங்களில் கிறிஸ்தவர்களே அதிகம் உள்ளனர். மேலும், உள்பகுதிகளிலும் கணிசமாக அவர்களது எண்ணிக்கை இருக்கிறது. அத்துடன் பட்டியல்இனத்தவர்கள், யாதவர், தேவர், பிள்ளை சமுதாயத்தை சேர்ந்த வாக் காளர்களும் பரவலாக உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பு
தாமிரபரணி- நம்பி யாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்புதிட்டம், காவல்கிணறுசந்திப்பில் தொடங்கப்பட்ட மலர்வணிகவளாகம் போன்ற திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கோரிக்கை.
மேலும், காற்றாலை சம்பந்தமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இங்குஅமைத்து, படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இத் தொகுதியில் 1,32,615 ஆண்கள், 1,37,247 பெண்கள், 12 இதரர்என, மொத்தம் 2,69,874 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 376 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன.
1957 முதல் 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 2 முறை, திமுக2 முறை, காந்தி காமராஜ் தேசியகாங்கிரஸ் 2 முறை, தமாகா,தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2006-ல் இத்தொகுதி யில் திமுக வேட்பாளர் எம்.அப்பாவு வெற்றி பெற்றார்.2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ். மைக்கேல் ராயப்பன் வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை- திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் அதே இருவர்
இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது மீண்டும் இன்பதுரை- அப்பாவு மோதுகின்றனர். இதனால்தேர்தல் களம் சூடு பிடித் திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT