Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
திமுக எம்எல்ஏக்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் பல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன், அணைக்கட்டு திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச் சாரத்தில் ஈடுபட்டார். வேலூர் அண்ணா சாலையில் மாநகர திமுக அலுவலகம் முன்பாக உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘நாடாளுமன்றத் தேர்தலைபோல இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். நல்ல வேட்பாளர்களை ஸ்டாலின் உங்களிடம் ஒப்படைத்து இருக் கிறார். இன்னும் 19 நாட்கள் தான் இருக்கிறது. எழுச்சியுடன் பிரச்சாரம் செய்தால் தமிழகத்தில் உதய சூரியன் உதிக்க போவது உறுதி.
மருத்துவப் படிப்புக்கு மட்டு மில்லாமல் நர்சிங் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வரப் போவதாக பாஜக தெரிவித்துள்ளது. தமிழக உரிமைகள் அனைத்தையும் பறித்து விட்டார்கள். மோடியை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய ஒரே தலைவர் தைரியமான தலைவர் ஸ்டாலின் மட்டுமே.
திமுக சட்டப்பேரவை உறுப் பினர்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. உங்களிடம் உரிமையோடு கேட் கிறேன். ஸ்டாலின் மகனாக, ஏன் கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன் திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்’’ என்றார்.
‘நீட்’ தேர்வால் 16 பேர் தற்கொலை
அணைக்கட்டில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடம் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கப்பட்டது. ஆனால், வெறும் ரூ.1000 கோடி கொடுத்தார்கள். இப்போது தேர்தல் வருவதால் ரூ.500 கோடி கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக எதைக் கேட்டாலும் கொடுப்பதில்லை.
நமக்கு கிடைக்க வேண்டி யதையும் ஒவ்வொன்றாக தட்டிப் பறித்து விட்டார்கள். முக்கியமாக கல்வி. தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள் அவர்களின் கல்விக்காக கிராமங்களில் இருந்து மாணவர்கள் படித்து மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நுழைவுத் தேர்வு வரவில்லை. ஆனால், அவர் உயிரிழந்தபிறகு பாஜக சொல்வதாகக் கூறி ‘நீட்' தேர்வை கொண்டு வந்தார்கள். அனிதாவில் தொடங்கி 16 பேர் ‘நீட்' தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர்.
நீங்கள் அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் பாஜக, மோடிக்கு போடும் வாக்கு. காஸ் விலை ஏற்றம், பெட்ரோல் விலை ஏற்றத்தை எதிர்த்து போராடி சிறைசென்றாரா? சசிகலா. அவரை தியாகத்தலைவி என ஏன் அழைக்கிறார்கள். கடைசியில் அவர் காலையே வாரிவிட்டு விட்டார்கள். பாஜகவை இந்திய அளவில் எதிர்க்கும் ஒரே கட்சி திமுக’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT