Published : 17 Mar 2021 09:50 PM
Last Updated : 17 Mar 2021 09:50 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அமமுக, மநீம கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.
திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
அவருடன் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஏஎல்எஸ் லட்சுமணன் கூறும்போது, இந்த தொகுதியில் எதிர்க் கட்சி எம்எல்ஏவாக மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். தொகுதி நிதி முழுவதையும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட்டுள்ளேன்.
தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்கள் தொடங்க முயற்சி மேற்கொள்வேன் என்று தெரிவித்தார். இத்தொகுதியில் அமமுக வேட்பாளர் பால்கண்ணும் மனு தாக்கல் செய்தார்.
மேலும், சுயேட்சை வேட்பாளர்களாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் சி.எம். ராகவன், மேலதாழையூத்தை சேர்ந்த ப. இசக்கிமுத்து, மாரியப்பபாண்டியன், திருநெல்வேலி சந்திப்பு மு. கருப்பசாமி, தளபதி முருகன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் ஜி. கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுபோல் அமமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் வி.எம்.எஸ். முகம்மது முபாரக் வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் பிரேம்நாத் மனு தாக்கல் செய்தார். அவர் கூறும்போது, பாளையங்கோட்டை தொகுதியில் வரும் 30-ம் தேதி கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்றார். இத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட காளை ரசூல்மைதீன் மனு அளித்தார்.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மு. அப்பாவு வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் உஷாவிடம் வேட்பு மனுவை அளித்தார். திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கே.பி.கே. ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
நாங்குநேரி தொகுதியில் அமமுக வேட்பாளர் பரமசிவஐயப்பன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரபாண்டி, அவருக்கு மாற்று வேட்பாளர் சோமுசுந்தரம், சுயேட்சை வேட்பாளர் லெனின் ஆகியோர் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா. ஆவுடையப்பனுக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஆ. பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT