Published : 17 Mar 2021 08:38 PM
Last Updated : 17 Mar 2021 08:38 PM
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து சென்னை காவல் ஆணையர் சாலைகளில், ஷாப்பிங் மால்களில் திடீர் சோதனை நடத்தி பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிய அறிவுறுத்தினார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை போலீஸார் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.
இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதில் இந்தியாவில் 5 மாநிலங்களில் அதிக அளவில் பரவுகிறது. குறிப்பாக தமிழகத்திலும் கரோனா பரவல் திடீரென தினம் 1000 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்கிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 400 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்துச் சந்திப்புகளில் திடீர் ஆய்வு செய்தார். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்துச் சந்திப்பில் ஆய்வு நடத்தினார்.
அப்போது முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அருகிலுள்ள விழிப்புணர்வு முகாமில் தகுந்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கி முகக் கவசங்களை வழங்கினார். முகக்கவசங்கள் வைத்திருந்து அணியாதவர்களுக்கு அதன் அவசியத்தை வலியுறுத்தி முகக்கவசங்களை அணியச் செய்தார்.
பின்னர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீரென ஆய்வு செய்து முகக்கவசங்கள் அணியாத பொதுமக்களிடம் முகக்கவசம் அணிதல் மற்றும் கரோனோ தடுப்பு அறிவுரைகளை வழங்கியும் வணிக நிலையப் பொறுப்பாளர்களுக்கு வணிக வளாகங்களில் கரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களைப் பராமரிப்பதின் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.
சென்னை பெருநகர காவல் சரகத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலையப் பகுதிகளிலும் போக்குவரத்து மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் அதிகாரிகள், போலீஸார் ஒருங்கிணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தந்து தொடர்ச்சியாகக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT