Published : 17 Mar 2021 07:48 PM
Last Updated : 17 Mar 2021 07:48 PM
அதிமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை பெற்றதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் பாஜக மாவட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 15 மாவட்டங்களில் மட்டுமே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட பாஜக போட்டியிடவில்லை.
பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவில் மாவட்ட தலைவர்களுக்கு அதிகளவில் சீட் கொடுக்கப்படும். தற்போது பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக மாநில நிர்வாகிகளே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். திருவையாறு, திருக்கோவிலூர் தொகுதிகளில் மட்டும் மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவிடம் குறைந்த தொகுதி பெற்றது, போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது போன்ற காரணங்களால் பாஜக மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி காரணமாக வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய போதிலும் தேர்தல் பணியில் பாஜக மாவட்டத் தலைவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இது குறித்து மாவட்டத் தலைவர் ஒருவர் கூறுகையில், ”தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாகும். அதிமுக கூட்டணியில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் செல்வாக்காக உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், அதை விட குறைவாக 20 தொகுதி மட்டுமே தருவதாக கூறியபோது, அதற்கு பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கக்கூடாது.
அந்த 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளாகும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளை அதிமுக வேண்டும் என்றே ஒதுக்க மறுத்துவிட்டது.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலே 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதை மனதில் கொண்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக தலைமையில் 3-வது அணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதற்கு முயற்சிக்காமல் அதிமுக கொடுத்த தொகுதியை வாங்கிக் கொண்டு கூட்டணியில் நீடிப்பது பிடிக்கவில்லை.
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய போது கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என நினைத்திருந்தோம். அதன் பிறகும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லை. இதனால் தேர்தல் பணி செய்வதில் ஆர்வம் இல்லாத நிலையில் உள்ளோம்”
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT