Published : 17 Mar 2021 07:41 PM
Last Updated : 17 Mar 2021 07:41 PM
கோவையில் இன்று (மார்ச் 17) ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பிய பெண்ணுக்கு, கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி கரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் தொற்று இதுவாகும். அதைத் தொடர்ந்து கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து, பின்னர் சற்று குறைந்தது. அண்மைக் காலமாக நூறுக்குக் கீழ் இருந்து வந்த கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இன்று (மார்ச் 17) ஒரே நாளில் 100-ஐக் கடந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக இங்குதான் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதற்குப் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியைப் பின்பற்றாததுமே காரணம் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ''கோவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 107 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 506 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் தனியார் ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களில் தினந்தோறும் 3,500 முதல் 3,700 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொது இடங்களுக்குச் செல்வோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
திருமணம், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொள்வோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி இருக்க வேண்டும். அறிகுறிகள் தெரிந்தவுடனே தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும். பலர் கரோனா தொற்று குறைந்துவிட்டதாகக் கருதி முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றனர். சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் தொற்று அதிகமாகிறது.
தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்'' என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு மொத்தம் ரூ.74,200 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்காக 25 இடங்களில் மொத்தம் ரூ.14,050 அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT