Published : 17 Mar 2021 07:05 PM
Last Updated : 17 Mar 2021 07:05 PM
ஜி.கே.வாசன் துரோகம் இழைத்துவிட்டார் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கோவை தங்கம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வால்பாறை மக்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுத் தந்துள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி பெற எதிர்ப்பு தெரிவித்தேன். இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். திருவிக நகரில் போட்டியிடுமாறு அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
வால்பாறை தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் நிற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேச்சையாக சைக்கிள் சின்னத்தில் 12 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கூறியதைத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கவில்லை. ஜி.கே.வாசன் என்னைக் கை விட்டுவிட்டார். எனக்கு எதிராகச் சதி, துரோகம் நடந்துள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். தமாகா துணைத் தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். என்னுடன் தமாகா நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்கின்றனர். வால்பாறை தொகுதியில் அரசியல் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். திமுகவில் சேரும் எண்ணம் தற்போது இல்லை.
வால்பாறை தொகுதியை எனக்கு ஒதுக்காததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம். சுயேச்சையாக போட்டியிட விரும்பவில்லை என்றாலும் நாளை எனது நிலைப்பாடு மாறலாம்''.
இவ்வாறு கோவை தங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT