Published : 17 Mar 2021 07:03 PM
Last Updated : 17 Mar 2021 07:03 PM
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கை:
"பெண் எஸ்.பி. ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மந்த நிலையில் விசாரணை நடத்திக் கொண்டிருப்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் புகார் அளிக்க வந்த சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி.யைத் தடுத்ததாக செங்கல்பட்டு எஸ்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவார்கள். ஏற்கெனவே இந்த வழக்கில் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபியை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியது.
ஆனால், இதுவரை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த மூத்த அதிகாரி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது அவருக்கு எதிரான நடவடிக்கையாகக் கருத முடியாது. இந்த நடவடிக்கையின் மூலம் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது பணியில் இருப்பதற்குச் சமமாகவே கருதப்படும். இதன் மூலம், அவர் பணியில் இருப்பதாகக் கருதப்பட்டு அவருக்குச் சேர வேண்டிய படிகள், சலுகைகள் அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஏறத்தாழ, அவர் பணியில் இருப்பதாகக் கருதப்பட்டு, விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கின்ற வகையில் காவல்துறையினர் ஆதரவோடு அவர் செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், மூத்த டிஜிபி பற்றிய பாலியல் வழக்கை அவருக்குக் கீழாகப் பணியாற்றுகிற டிஎஸ்பி பொறுப்பில் இருக்கும் ஒருவர் விசாரிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மூத்த டிஜிபி அதிகாரியான அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடத்தப்படுகிற விசாரணைகள் ஒரு கண்துடைப்பு நாடகமாகவே இருக்க முடியும்.
பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியைக் கட்டாயம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையைத் தமிழக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தத் தவறினால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளிக்குத் துணைபோகிற குற்றத்தைத் தமிழக அரசே செய்ததாகக் கருத வேண்டிய நிலை ஏற்படும்.
இதில், தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணைகள், அதிமுக ஆட்சியில் பல வழக்குகளில் சுணக்கம் இருப்பதைப்போல, இவ்வழக்கிலும் தமிழக அரசு நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
ஏற்கெனவே, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுகவினரைப் பாதுகாக்கத் தமிழக ஆட்சியாளர்கள் செய்த பல சூழ்ச்சிகளை முறியடித்துத்தான் சம்பந்தப்பட்ட அதிமுகவினர் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெண் எஸ்.பி.யை சுங்கச்சாவடியில் வழிமறித்ததாக மற்றொரு எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரணப் பெண்களுக்கு தமிழக காவல்துறை எங்கே பாதுகாப்பு அளிக்கப் போகிறது?
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற அவலநிலையிலிருந்து காவல்துறையை மீட்க வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சென்னை உயர் நீதிமன்றம் எடுத்திருக்கும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். எனவே, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT