Published : 17 Mar 2021 06:05 PM
Last Updated : 17 Mar 2021 06:05 PM
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தொகுதிகளை பாஜக பறித்து அதில் களம் காண்கிறது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக - அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதன் பின்னர் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதிலும், அதிமுகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதிலும் பிரச்சனை ஏற்பட்டு நீண்ட இழுபறிக்கு நீடித்தது.
இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படாத நிலையில், தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பாமகவினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் முறைப்படி தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பதில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக, அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது.
இதில் பாஜக - 9 தொகுதிகளுக்கான வேட்பாளர், அதிமுக - 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்து வந்த மண்ணாடிப்பட்டு தொகுதியை, பாஜக பிடிவாதமாக நின்று கைப்பற்றியது. இங்கு காங்கிரஸூல் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நெல்லித்தோப்பு தொகுதியையும் பாஜக தன்வசமாக்கியது. இத்தொகுதியில் ஏற்கனவே ஓம்சக்தி சேகர் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். இங்கு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஜான்குமாரின் மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜான்குமாருக்கு காமராஜ் நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர என்.ஆர்.காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கல்யாணசுந்தரத்துக்கு காலாப்பட்டு தொகுதியை பெற்றுள்ளது. நிரவி திருப்பட்டினத்தில் முன்னாள் சபாநாயகர் விஎம்சி சிவக்குமாரின் மகன் விஎம்சி மனோகரனை கட்சியில் சேர்த்து அவருக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தொகுதிகளை பறித்து தன் வசமாக்கிக்கொண்டுள்ள பாஜக அரசியல் சாணக்கிய தனத்தை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT