Last Updated : 17 Mar, 2021 04:53 PM

 

Published : 17 Mar 2021 04:53 PM
Last Updated : 17 Mar 2021 04:53 PM

புதுச்சேரியில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் நேரடி மோதல்; ஐந்து தொகுதிகளில் பாஜகவுடன் நேரடி மோதல்

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியானது 9 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுடனும், ஐந்து தொகுதிகளில் பாஜகவுடனும் நேரடியாக மோதுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

இரு அணிகளுக்கு இடையே பலத்த போட்டி உருவாகியுள்ளது. இரு அணிகளிலும் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் இழுபறி நீடித்து வந்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகும் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. நேற்று (மார்ச் 16) இரவு முடிவுக்கு வந்து இரு கூட்டணியிலும் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டியிடுகிறது. ஆனால், வேட்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், தொகுதிகள் அடிப்படையாக, 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் என்.ஆர்.காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே, ஏனாம், நெட்டப்பாக்கம், ஏம்பலம், நெடுங்காடு, கதிர்காமம், இந்திராநகர் ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களும் நேரடியாக மோதுகின்றனர்.

மீதமுள்ள 7 தொகுதிகளில் வில்லியனூர், மங்களம், பாகூர், ராஜ்பவன், திருபுவனை ஆகிய 5 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் திமுகவுடன் மோதுகிறது. மீதமுள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உழவர்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் என்.ஆர்.காங்கிரஸ் மோதுகிறது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஊசுடு, மணவெளி, காமராஜர்நகர், லாஸ்பேட்டை, திருநள்ளாறு ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸுடனும், காலாப்பட்டு, நிரவி, நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு ஆகிய 4 தொகுதிகளிலும் திமுகவுடனும் பாஜக மோதுகிறது.

கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் திமுகவுடனும், முத்தியால்பேட்டையில் காங்கிரசுடனும் அதிமுக மோதுகிறது.

நாராயணசாமி தொடங்கி தேர்தலில் போட்டியிடாத பிரபலங்கள்

புதுவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸிலிருந்து என்.ஆர்.காங்கிரசுக்கு தாவிய மல்லாடி கிருஷ்ணாராவ் தனது தொகுதியை ரங்கசாமிக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதனால், அவரும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தோடு பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கடேசன் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இவருக்கும் சீட் வழங்கப்படவில்லை. அவரும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

என்.ஆர்.காங்கிரசில் மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏ செல்வம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு பதிலாக காங்கிரஸிலிருந்து வந்த கே.எஸ்.பி.ரமேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயபால் போட்டியிடவில்லை. மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடவில்லை. திமுகவில் காரைக்கால் மாவட்டம் நிரவி தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தனுக்கு திமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இவர்களில் செல்வம், கீதா ஆனந்தன் ஆகியோர் சுயேட்சையாக களம் இறங்க வாய்ப்புள்ளதாக ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொகுதி மாறிய அமைச்சர்

புதுவை காலாப்பட்டு தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாஜகான். இவர் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை. இவரின் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தொகுதி மாறி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x