Published : 17 Mar 2021 04:44 PM
Last Updated : 17 Mar 2021 04:44 PM
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்கலங்கிய குஷ்பு, என் தாயில்லாமல் நான் இல்லை என்று தழுதழுத்த குரலில் பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். முன்னதாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக அந்தத் தொகுதியைப் பாமகவுக்கு ஒதுக்கியது. இதையடுத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவைப் பாஜக தலைமை, வேட்பாளராக நிறுத்தியது. குஷ்பு திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய குஷ்பு, ''நான் வெற்றி பெற வேண்டும் என்று என்னுடைய அம்மா கடவுளை வேண்டி வருகிறார்.
வாழ்க்கையில் தந்தையின் துணை எனக்குக் கிடைக்கவில்லை. அம்மாவின் மடி மட்டும்தான் எனக்குக் கிடைத்தது. நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால், அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் என்னுடைய தாய். இன்றும் என் அம்மா என் வீட்டில் என்னுடன்தான் இருக்கிறார். இன்று வரை என்னுடைய ஒவ்வொரு வெற்றியையும் என் அம்மாவின் காலடியில்தான் அர்ப்பணித்திருக்கிறேன். ஏனெனில் அவர் இல்லாமல் இன்று நான் இல்லை'' என்று தழுதழுத்த குரலில் கண்கலங்கியவாறே பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நான் தேர்தல்களில் சீட் கேட்கவில்லை. ஆனால், பாஜகவில் இன்று சீட் கிடைத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு இன்று பேரும், புகழும் கொடுத்த மக்களை நம்பியே களம் காண்கிறேன். அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குஷ்பு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT