அதிமுக ஆட்சியில் கடன்சுமை மட்டுமே உயர்ந்துள்ளது: கனிமொழி விமர்சனம்

அதிமுக ஆட்சியில் கடன்சுமை மட்டுமே உயர்ந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
Updated on
1 min read

ஆட்சியாளர்கள் கடன் சுமையை மட்டுமே ஏற்றி வைத்து உள்ளனர் என்று கனிமொழி கூறினார். தூத்துக்குடியில் மாநில தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க ஆட்சி நிச்சயமாக வரும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்பார். இங்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் கீதாஜீவன், தொடர்ந்து மக்களுக்கு பணிகளை செய்து கொண்டிருக்கக் கூடியவர்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் அழைக்கும் போதெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நிச்சயமாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார். மக்கள் சரியாகப் புரிந்து கொண்டு உள்ளார்கள்.

10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பணியாற்றி வருகிறார். அவர்கள் மக்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. கரோனா காலத்திலும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு நிறைவேற்றாத ஆட்சி, தேர்தல் நேரத்தில் கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஆட்சி நடக்கிறது.

செல்போன் கொடுப்பதாக கூறினார்கள். அதனை கொடுத்திருந்தால் கூட ஊரடங்கு காலத்தில் மாணவ - மாணவிகள் பயன்படுத்தி இருப்பார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது செய்யாமல் கடன் சுமையை மட்டும் ஏற்றி வைத்துள்ளனர். நிச்சயமாக மக்களுக்கு தரக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள்.

தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து இருக்கக் கூடியவர் தி.மு.க தலைவர். அவர் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவார். நிச்சயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது”

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in